சென்னை கல்லூரி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மேற்குவங்கத்தைச் சேர்ந்த அமானுல்லா கான், முகமது பாசில், முகமது ஆசிப் இக்பால் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
சென்னை ஏழுகிணறு போர்ச்சு கீசியர் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் மகாலட்சுமி, தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். இளைய மகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். குடும்பம் வறுமையில் வாடியதால், கிடைக்கும் வேலைகளை செய்து மகள்களை வளர்த்து வந்தார் சாந்தி. தாய் படும் கஷ்டத்தைப் பார்த்து, அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று மகாலட்சுமி விருப்பப்பட்டார்.
இந்த சூழலில், ஆன்லைன் பங்கு வர்த்தகம் தொடர்பான விளம்பரம் மகாலட்சுமியின் இன்ஸ்டாகிராமுக்கு வந்திருக்கிறது. அந்த விளம்பரத்தில் 750 ரூபாய் முதலீடு செய்தால் மாதம் குறிப்பிட்ட தொகை வீதம் வருடத்திற்கு 23,500 ரூபாய் திரும்பக் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மகாலட்சுமி, தானும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறார். சிறிது சிறிதாக 30.000 ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறார். ஆனால், 1 மாதமாகியும் 1 ரூபாய் கூட திரும்ப வரவில்லை. இதுகுறித்து இன்ஸ்டாகிராமுக்கு விளம்பரம் வந்த நம்பரை தொடர்பு கொண்டபோது, எவ்வித பதிலும் இல்லை. இதனால், மகாலட்சுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதுகுறித்து தனது தாயாரிடம் கூறி வேதனைப்பட்டிருக்கிறார். அதற்கு தாய் சாந்தியும், குடும்பம் கஷ்டத்தில் இருக்கும்போது இப்படி பணத்தை இழந்துவிட்டாயே என்று திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகாலட்சுமி, கடந்த 2-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், மகாலட்சுமியின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, மகாலட்சுமியை ஏமாற்றியது மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த அமானுல்லா கான், முகமது பாசில், முகமது ஆசிப் இக்பால் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸார் கொல்கத்தா சென்று கைது செய்தனர். மூவரும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.