‘மிஸ்டர் இந்தியா’ செயின் திருடன் முகமது ஃபாசில்!

‘மிஸ்டர் இந்தியா’ செயின் திருடன் முகமது ஃபாசில்!

Share it if you like it

மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற முகமது ஃபாசில் என்கிற இளைஞர் செயின் திருட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை மண்ணடி மரக்காயர் தெருவைச் சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான் மகன் முகமது ஃபாசில். பி.டெக். பட்டதாரியான இவர், 2020-ம் ஆண்டு இளையோருக்கான ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றவர். பின்னர், தனது நண்பருடன் சேர்ந்து பிசினஸ் செய்து வந்திருக்கிறார். இதில் பலத்த நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாகி இருக்கிறார். எனவே, நஷ்டத்தை சமாளிக்கவும், கடனை அடைக்கவும் ரூட்டை மாற்றி இருக்கிறார் முகமது ஃபாசில். அதுதான் செயின் பறிப்பு. அடையாளம் தெரியாத வகையில், தலையில் ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டும், முகத்தில் கர்சீப்பைக் கட்டிக் கொண்டும் இரு சக்கர வாகனத்தில் புறப்பட வேண்டியது.

பின்னர், மக்கள் அதிக நடமாட்டம் இல்லாத பகுதியைத் தேர்வு செய்து போன் பேசுவது போலவோ, வண்டியை ரிப்பேர் செய்வது போலவோ நின்று கொள்வது. பின்னர், அவ்வழியாக வரும் பெண்களை டார்கெட் செய்து, வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்ப வேண்டியது. அருகில் சென்றதும், அப்பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் செயின் மற்றும் தாலி செயின்களை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் எஸ்கேப்பாகி விடுவது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி செயின் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவர் மீது கொரட்டூர் காவல் நிலையம் உட்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், கொண்டித்தோப்பு ஜிந்தா சாகிப் தெருவைச் சேர்ந்த ஜெய்மால் மனைவி ரத்தினா தேவி, அப்பகுதியிலுள்ள ஏழுகிணறு பட்டவர்த்தம்மன் கோயில் தெருவிலுள்ள ஜெயின் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பி இருக்கிறார். பெத்த நாயக்கன் தெரு வழியாக அவர் வந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த முகமது ஃபாசில், ரத்தினா தேவி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார். இதுகுறித்து அவர் ஏழுகிணறு போலீஸில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான், அந்த நபர் முகமது ஃபாசில் என்பது தெரியவந்து, அவரை கைது செய்தனர்.

மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற நபர், செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில், கவனிக்கப்பட இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் தங்களது பணத் தேவைக்காக இதுபோன்ற செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், பல மாணவர்கள் செயின் பறிப்பு வழக்கில் சிக்கி இருக்கிறார்கள். ஆகவே, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களை போலீஸார் முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமானால், இரு சக்கர வாகன சோதனையை கடுமையாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.


Share it if you like it