முதலாளியிடமே கைவரிசை… ரூ.50 லட்சம் வழிப்பறி: ஹாஜா மைதீன் கைது!

முதலாளியிடமே கைவரிசை… ரூ.50 லட்சம் வழிப்பறி: ஹாஜா மைதீன் கைது!

Share it if you like it

சென்னையில் பணப் பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் நடத்தி வருபவரிடம் 50 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த ஹாஜா மைதீன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை யானைகவுனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மண்ணடி பகுதியில் தனியார் பணப் பரிவர்த்தனை நிறுவனம் நடத்தி வருபவர் ஜாகீர் உசேன். இவர், தனது நிறுவன முதலீடுக்காக, திருவல்லிக்கேணியில் இருக்கும் தனது நண்பர் அசைன் முகமதுவிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் வாங்குவதற்காகச் சென்றிருக்கிறார். அப்போது, தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஹாஜா மைதீன் என்பவரையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். பணத்தை வாங்கிக் கொண்டு மண்ணடியில் இருக்கும் தனது நிறுவனத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், வேண்டுமென்றே ஜாகீர் உசேன் வாகனத்தில் இடித்திருக்கிறார்கள். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவரது முகத்தில் பெப்பர் ஸ்பிரேயை அடித்து, திக்குமுக்காடச் செய்தனர். பின்னர், அவர் வைத்திருந்த 50 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜாகீர் உசேன், இதுகுறித்து யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் ஹாஜா மைதீனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்திருக்கிறார். பிறகு, போலீஸார் முறைப்படி நடத்திய விசாரணையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜாகீர் உசேனிடம் பணம் பறிக்க திட்டமிட்டதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, ஹாஜா மைதீனை கைது செய்த போலீஸார், பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Share it if you like it