பாகிஸ்தானுக்கு சீனா கடன்: அமெரிக்கா கவலை!

பாகிஸ்தானுக்கு சீனா கடன்: அமெரிக்கா கவலை!

Share it if you like it

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், நேபாளத்துக்கு சீனா கட்டாயப்படுத்தி கடன் வழங்குகிறது. இது தனக்கு சாதகமான நேரத்தில் அந்நாடுகளை பயன்படுத்திக் கொள்ள சீனா நினைக்கலாம் என்று அமெரிக்கா கவலை தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கையும், பாகிஸ்தானும் வரலாறு காணாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. கடந்தாண்டு இலங்கையில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் புரட்சி வெடித்து இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த சூழலில், தற்போது பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனவே, இரு நாடுகளும் வெளிநாட்டு கடன்கள் பெறுவது, சர்வதேச கண்காணிப்பு நிதியத்தின் நிதி உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இந்த நிலையில்தான், இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கு கடன்களை வாரி வழங்கி வருகிறது சீனா. ஏற்கெனவே பாகிஸ்தான் 30 பில்லியன் டாலர் கடன் கொடுக்க வேண்டிய நிலையில், தற்போது புதிதாக 700 மில்லியன் டாலர் கடனை சீன வளர்ச்சி வங்கி வழங்கி இருக்கிறது.

இதுதான் பாகிஸ்தானை மறைமுகமாக சீனா கட்டுப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. அதாவது, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக மார்ச் 1-ம் தேதி 3 நாள் பயணமாக இந்தியா வருகை தருகிறார். இந்த சூழலில்தான், அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசிய நாடுகளுக்கான வெளியுறவு இணை அமைச்சர் டொனால்டு லூ அளித்த பேட்டியில், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு சீனா கடனுதவி அளிப்பது கவலை அளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

“இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் சீனா அதிகளவு கடன்களை கொடுப்பது, அந்நாட்டில் கட்டாய அந்நியச் செலாவணியை ஏற்படுத்த பயன்படுத்தப்படலாம். இவ்வாறு இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு சீன அதிகளவு கடன் கொடுப்பது கவலை அளிப்பதாக உள்ளது. இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதற்காகவே சீனா இக்கடன்களை வழங்கலாம். இதுகுறித்து இந்தியாவுடனும், பிற நாடுகளுடனும் அமெரிக்கா விவாதித்து வருகிறது. நாடுகள் தங்கள் முடிவை தாங்களே எடுக்க வேண்டும். 3-வது நாட்டின் கட்டாயத்தின் பேரில் எடுக்கக்கூடாது. இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்த அமெரிக்கா உதவத் தயாராக இருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார்.

மேலும், “சீன கண்காணிப்பு பலூன் தொடர்பான சமீபத்திய பிரச்னைகளுக்கு முன்பு நாங்கள் சீனாவை பற்றி தீவிரமான உரையாடல்களை நடத்தி இருக்கிறோம். எனவே, அந்த உரையாடல்கள் தொடரும் என்று நான் முழுமையாக எதிர்பார்க்கிறேன். இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான குவாட் அமைப்பு, உண்மையில் எந்தவொரு நாடு அல்லது நாடுகளின் குழுவிற்கு எதிரான ஒரு அமைப்பு அல்ல. குவாட் என்பது சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது” என்றார்.


Share it if you like it