டிராக்டர் மூலம் பச்சிளம் நெற்பயிர்கள் அழிப்பு: ஈவு இரக்கமற்ற அதிகாரிகள்; வசைபாடும் மக்கள்!

டிராக்டர் மூலம் பச்சிளம் நெற்பயிர்கள் அழிப்பு: ஈவு இரக்கமற்ற அதிகாரிகள்; வசைபாடும் மக்கள்!

Share it if you like it

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 25 ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை, புறம்போக்கு நிலம் என்று சொல்லி டிராக்டர் மூலம் வருவாய்த்துறை அதிகாரிகள் அழித்த சம்பவம், விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்துள்ள ஒழுகூர் அருகே மருதாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். விவசாயியான இவர், அதே கிராமத்தில் உள்ள தனது நிலத்துடன், அருகிலுள்ள 5 சென்ட் புறம்போக்கு நிலத்திலும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறார். மேற்கண்ட புறம்போக்கு நிலத்துக்கான வரியையும் நாகராஜ் முறையாக செலுத்தி வருகிறார். தற்போது மேற்கண்ட நிலத்தில் நெற்பயிர் நடவு செய்திருந்தார் நாகராஜ். இப்பயிர்கள் நன்கு வளர்ந்து பச்சைக்கட்டி, பால்கதிர் விட்டு தொண்டை பயிர்களாக இருந்தன.

இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி ஒழுகூர் கிராமத்துக்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், மேற்படி நாகராஜனிடம் 5 சென்ட் புறம்போக்கு நிலத்தை ஒப்படைக்குமாறு கேட்டிருக்கிறார்கள். அதற்கு, அறுவடை முடிந்த பிறகு ஒப்படைப்பதாக நாகராஜன் கூறியிருக்கிறார். ஆனால், மேற்கண்ட நிலம் இருளர் சமுதாய மக்களுக்கு குடியிருப்பு அமைக்க ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், ஆகவே, உடனடியாக நிலத்தை எடுத்துக் கொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். நாகராஜன் கெஞ்சிக் கேட்டும் அதிகாரிகள் மனமிறங்கவில்லை.

நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பச்சிளம் நெற்பயிர்களை, நாகராஜனின் கண் முன்னே டிராக்டர் மூலம் அழித்தனர். இதைப் பார்த்து கண்ணீர் ததும்ப வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்துக் கொண்டே இருந்தார் விவசாயி நாகராஜன். ஆனால், ஒரு விவசாயியின் வேதனை அந்த அதிகாரிகளுக்கு தெரியவும் இல்லை, புரியவும் இல்லை. இதனிடையே, அதிகாரிகளின் அராஜக செயலை அறிந்து அப்பகுதி விவசாயிகள் திரண்டு, வாக்குவாதம் செய்தனர்.

ஆனால், யாரையும் சட்டை செய்யாமல் பயிர்களை அழிப்பதிலேயே குறியாக இருந்தனர் அதிகாரிகள். இதனால், அப்பகுதியி விவசாயிகள் அதிகாரிகளுக்கு சாபம் விடாத குறையாக வசைபாடினார். பயிர்களும் உயிர்கள்தானே. பிள்ளைகளைப் போல பயிர்களை வளர்த்து பாதுகாத்து வரும் எங்கள் கண் முன்பே பச்சிளம் நெற்பயிர்களை அதிகாரிகள் அழித்தது எங்களுக்கு மிகுந்த வேதனையை அளித்தது. இச்சம்பவம் எங்களுடைய வாழ்வாதாரத்தையே அழித்ததுபோல இருக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், இந்த பாவிகளுக்கு பச்சைப்பயிரை அழிக்க எங்கிருந்துதான் மனம் வந்ததோடு என்று சாபம் விடுவதோடு, இன்னும் சில வாரங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் பயிர்களை அழித்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகின்றனர்.


Share it if you like it