எம்.எம்.தண்டபாணி தேசிகர்

எம்.எம்.தண்டபாணி தேசிகர்

Share it if you like it

” தாமரை பூத்த தடாகமடி -செந்
தமிழ் மணத் தேன் பொங்கி பாயுதடி ” என்ற பாடலைத் தன் கந்தர்வக் குரல் மூலம் பிரபலப்படுத்தி தமிழிசைத் தேன் பிரவாகமாகப்பொங்கிப் பாயக் காரணமானவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர்.

ஆகஸ்டு 27, 1908 திருச்செங்காட்டங்குடி எனும் சிற்றூரில் பிறந்தவர்
‘ இசை அரசு ‘ என்று புகழப்பட்ட தண்டபாணி தேசிகர்.
ஆரம்ப காலத்தில் தன் தந்தையார் முத்தையா தேசிகரிடம் தேவாரம் பயின்றார்.
பிறகு
மாணிக்க தேசிகர் , சட்டையப்ப நாயனக்காரர் மற்றும் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் முறையாக சங்கீதம் பயின்ற தண்டபாணி தேசிகரின் முதல் கச்சேரி திருமருகல் எனும் ஊரில் அரங்கேறியது.
பின்னாளில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசைத்துறைத் தலைவராக பதினைந்தாண்டுகள் பணியாற்றினார்.
முழு நீள திருக்குறள் இசை நிகழ்ச்சி நடத்திய இசைக் கலைஞர்களில் தண்டபாணி தேசிகரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்சிக் கவி பாரதிதாசனின் ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ ‘ ,’வெண்ணிலவும் வானும் போல ‘ போன்ற பாடல்களை இசையமைத்துப் பாடி கவிஞரின் பாராட்டைப் பெற்றவர்.

வசீகரத் தோற்றம்,இசை ஞானம், நல்ல குரல் வளத்துடன் தெளிவான தமிழ் உச்சரிப்பும் இருந்ததால் தண்டபாணி தேசிகரை தமிழ்த் திரையுலகம் அரவணைத்துக்கொண்டது.
சைவம் வளர்த்த
‘ பட்டினத்தார் ‘, ‘தாயுமானவர் ‘, ‘மாணிக்கவாசகர் ‘ ,’நந்தனார் ‘ போன்ற அடியார்களை திரைப்படங்கள் மூலமாக நம் கண் முன்னே நிறுத்தியவர் தேசிகர்.

நந்தனார் திரைப்படத்தில்
” என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா ” என நந்தனாராகவே மாறி தேசிகர் பாடிக்கொண்டு வரும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டும் கல்லையும் கனியவைக்கும் குரலைக் கேட்டும் சிலிர்க்காதவர் உண்டோ?
தமிழிசை மறுமலர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய தண்டபாணி தேசிகருக்கு
தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றத்தின் கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது .
இதைத் தவிர இசைப் பேரறிஞர் , இசை அரசு , இசைப் புலவர் ,தேவார மணி, சங்கீத ஸாகித்ய சிரோமணி உள்ளிட்ட ஏராளமான பட்டங்களும் சங்கீத நாடக அகாடமியின் விருதும் இவருக்குப் பெருமை சேர்த்தன.

பாடகர் , இசையமைப்பாளர் , பேராசிரியர், திரைப்பட நடிகர் எனப் பன்முகத் திறமை கொண்ட எம்.எம்.தண்டபாணி தேசிகரின் நினைவைப் போற்றுவோம்!

திருமதி. பிரியா ராம்குமார்


Share it if you like it