சகோதரி முறை என்பதால் திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவியை, இரும்புக் கம்பியால் அடித்தே கொன்ற இர்பானை போலீஸார் கைது செய்தனர். டெல்லியில் பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தெற்கு டெல்லி மாளவியா நகரைச் சேர்ந்தவர் நர்கிஸ். கல்லூரி மாணவியான இவர், தனது உறவு முறை அண்ணனான இர்பானுடன், சகோதர முறையில் சகஜமாக பேசி பழகி வந்திருக்கிறார். இர்பான் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வந்து வந்தார். நர்கிஸ் பேசி பழகியதை தவறாக எடுத்துக் கொண்ட இர்பான், ஒரு கட்டத்தில் அவரை காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நர்கிஸ், சகோதர முறையிலேயே பேசி பழகியதாகக் கூறியிருக்கிறார். எனினும், இர்பான் விடாமல் நச்சரித்து வந்திருக்கிறார். மேலும், இந்த விவகாரத்தை தனது பெற்றோரிடமும் கூறி, நர்கீஸை பெண் கேட்குமாறு கூறியிருக்கிறார்.
இர்பான் பெற்றோருடன், நர்கீஸின் பெற்றோரை சந்தித்து பெண் கேட்டிருக்கிறார்கள். ஆனால், இர்பானை திருமணம் செய்துகொள்ள நர்கிஸ் உறுதியாக மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த இர்பான், தனக்கு கிடைக்காத நர்கிஸ் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்கிற நோக்கில், கடந்த 3 நாட்களைக நர்கிஸை கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். ஆனால், ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. இந்த சூழலில், நேற்று கல்லூரி முடிந்து தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள விஜய் மண்டல் பூங்காவிற்கு நர்கிஸ் சென்றிருக்கிறார்.
அப்போது அங்கு வந்த இர்பான், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் வற்புறுத்தி இருக்கிறார். இதற்கு நர்கிஸ் மறுப்புத் தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, தான் தயாராகக் கொண்டு வந்திருந்த இருப்புக் கம்பியை எடுத்து நர்கிஸின் தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகத் தாக்கி இருக்கிறார் இர்பான். இதில் பலத்த காயமடைந்த நர்கிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தோழிகள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் விரைந்து வந்து, இர்பானை கைது செய்தனர்.
தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.