ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் 40 லட்சம் வேலைவாய்ப்புகள்: பிரதமர் மோடி தகவல்!

ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் 40 லட்சம் வேலைவாய்ப்புகள்: பிரதமர் மோடி தகவல்!

Share it if you like it

ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் 40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

நம் நாட்டில் வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு ரோஜ்கார் என்ற வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டத்தை கடந்தாண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 75,000 பேருக்கு வேலை வழங்குவதற்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முறையும் 70,000-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசில் வேலைவாய்ப்பை பெற்று வருவதால், இத்திட்டம் இளைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், ரோஜ்கார் திட்டத்தின் கீழ் இன்றும் 71,000 பேருக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக மத்திய அரசு பணி நியமனத்திற்கான ஆணைகள் அடங்கிய கடிதங்களை வழங்கினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஆத்ம நிர்பார் பாரத் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பொம்மை உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் உற்பத்தி ஆலையானது முன்னணி வகிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் அரசு வேலைகளை வழங்குவது விரைவுப்படுத்தப்பட்டிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் மட்டுமே 22,000 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை நேற்று வழங்கப்பட்டது. ஓர் அறிக்கையின்படி, ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் 40 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது” என்று கூறினார்.


Share it if you like it