குப்பைகளை அகற்றிய பிரதமர்: வைரலாகும் வீடியோ!

குப்பைகளை அகற்றிய பிரதமர்: வைரலாகும் வீடியோ!

Share it if you like it

‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் மீதான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று பிரகதி மைதான் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் கீழ் புதிதாக திறக்கப்பட்ட ஐ.டி.பி.ஓ. சுரங்கப்பாதையை ஆய்வு செய்யும்போது குப்பைகளை சுத்தம் செய்தார்.

920 கோடி ரூபாய் மத்திப்பில் அமைக்கப்பட்ட பிரகதி மைதான் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் முக்கிய சுரங்கப்பாதை மற்றும் 5 சிறு சுரங்கப் பாதைகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். 1.6 கிமீ நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதையானது, கிழக்கு டெல்லி, நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய பகுதிகளிலிருந்து இந்தியா கேட் மற்றும் பிற மத்திய டெல்லி பகுதிகளுக்கு மக்கள் எளிமையாக பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.டி.ஓ., மதுரா சாலை மற்றும் பைரன் மார்க் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும். இது ரிங் ரோட்டை இந்தியா கேட்டுடன் புரானா கிலா சாலை வழியாக பிரகதி மைதானம் வழியாக இணைக்கிறது. 6 வழியாகப் பிரிக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதையானது, பிரகதி மைதானத்தின் பெரிய அடித்தள வாகன நிறுத்துமிடத்திற்கான அணுகல் உட்பட பல நோக்கங்களைக் கொண்டுள்ளது.

ஸ்மார்ட் ஃபயர் மேனேஜ்மென்ட், நவீன காற்றோட்டம் மற்றும் தானியங்கி வடிகால், டிஜிட்டல் முறையில் கட்டுப்படுத்தப்படும் சி.சி.டி.வி. மற்றும் பொது அறிவிப்பு அமைப்பு போன்ற போக்குவரத்தின் சீரான இயக்கத்திற்கான சமீபத்திய உலகளாவிய தரமான வசதிகளுடன் சுரங்கப்பாதை பொருத்தப்பட்டுள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை, பைரோன் மார்க்கிற்கு மாற்றுப் பாதையாகச் செயல்படும். இது பைரோன் மார்க்கின் போக்குவரத்தில் பாதிக்கு மேல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதையின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஹர்தீப் சிங் பூரி, சோம் பிரகாஷ், அனுப்ரியா படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், புதிதாகத் தொடங்கப்பட்ட சுரங்கப்பாதையைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது, அங்கு கிடந்த குப்பைகளை பிரதமர் வெறும் கைகளால் அகற்றினார். மேலும், சுரங்கப்பாதையில் நடந்து செல்லும்போது, அங்கு கிடந்த காலி தண்ணீர் பாட்டில் மற்றும் பிற குப்பைகளையும் அப்புறப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோதான் தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த மக்கள், பிரதமர் ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) திட்டத்தில் உறுதியுடன் இருப்பதாக கமென்ட் செய்து வருகிறார்கள்.


Share it if you like it