இறந்தவர் உயிரோடு வந்த அதிசயம்… மருத்துவ உலகத்துக்கே ‘டஃப்’ கொடுத்த தி.மு.க. நிர்வாகி!

இறந்தவர் உயிரோடு வந்த அதிசயம்… மருத்துவ உலகத்துக்கே ‘டஃப்’ கொடுத்த தி.மு.க. நிர்வாகி!

Share it if you like it

இறந்தவர் உயிரோடு இருப்பதாக போலி ஆவணங்கள் தயார் செய்து, பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை தி.மு.க. நிர்வாகி பெயரில் பத்திரப்பதிவு செய்து அபகரித்த 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொன்னிவாடியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் சிவக்குமார். தந்தையும் மகனும் சேர்ந்து, தாராபுரத்திலுள்ள தங்களுக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை, 2010-ம் ஆண்டு ஒரு காற்றாலை நிறுவனத்துக்கு 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கி இருக்கிறார்கள். அந்த வகையில், கடந்த 2011-ம் ஆண்டு மேற்கண்ட இடத்தை தாராபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு ‘பவர் ஆப் அட்டர்னி’ எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். இதனிடையே, கடந்த 2015-ம் ஆண்டு சோமசுந்தரம் விபத்தில் இறந்து விட்டார். எனவே, சொத்துகளை மகன் சிவக்குமார் பராமரித்து வந்தார்.

இந்த நிலையில், செந்தில்குமார் நிகழாண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி சிவக்குமாரை சந்தித்து, தனது பெயருக்கு பவர் கொடுத்திருக்கும் இடத்தை தானே வாங்கிக் கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால், இதற்கு சிவக்குமார் மறுத்து விட்டார். இதையடுத்து, போலி ஆவணங்கள் மூலம், பிப்ரவரி 13-ம் தேதி கிரையப் பத்திரம் தயார் செய்து, மேற்கண்ட இடத்தை பத்திரப்பதிவு செய்து செந்தில்குமார் அபகரித்திருக்கிறார். இதையறிந்த சிவக்குமார், திருப்பூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, இறந்த சோமசுந்தரம் உயிரோடு இருப்பதாக, தாராபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் திருமலைசாமியிடம் சான்று பெற்று, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பாலசுப்ரமணியம் பெயரில் கிரையம் செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலி ஆணவங்கள் மூலம் நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பாக, டாக்டர் திருமலைசாமி, செந்தில்குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.


Share it if you like it