ஐ.பி.எல். தொடரின்போது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள மும்பையிலுள்ள மருத்துவமனைக்கு வந்த தோனி, கையில் பகவத் கீதை புத்தகத்துடன் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனினும், முதற்கட்ட சிகிச்சைகளை மட்டுமே எடுத்துக் கொண்ட தோனி, காயத்துடனே தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வந்தார். ஐ.பி.எல். தொடர் முடிந்த பிறகு தோனி தனது முழங்கால் காயத்திற்காக, மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று தகவல் வெளியாகியது. மேலும், ஏற்கனவே ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியபோது, இதே மருத்துவமனையில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த அதே மருத்துவர் தின்ஷா பர்திவாலாதான், தோனிக்கும் அறுவை சிகிச்சை மேற்கொளவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, நேற்று காலை மும்பை விமான நிலையத்திலிருந்து காரில் வந்த தோனி, பகவத் கீதை புத்தகத்தை கையில் ஏந்தியபடியே மருத்துவமனைக்குச் சென்றார். இந்த புகைப்படம்தான் அவரது ரசிகர்களால் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை செய்துகொண்ட தோனி, சிறிது காலம் ஓய்வில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை சி.எஸ்.கே. அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதனும் உறுதி செய்திருக்கிறார்.