மக்களின் நலன் கருதி தனது தந்தையின் நினைவிடத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அகற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசாவை சேர்ந்த சுதந்திர போராட்ட தலைவர் பிஜு பட்நாயக். இவர், பல்வேறு சுதந்திர போராட்டங்களில் பங்கேற்றவர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். அந்த கட்சியின் சார்பில் ஒடிசா முதல்வராக பிஜு பட்நாயக் பதவி வகித்தார்.
கடந்த 1969-ல் இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரஸில் இருந்து பிஜூ வெளியேறினார். இதையடுத்து, உத்கல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அதன்பின்னர் கடந்த 1977-ல் ஜனதா கட்சியில் இணைந்தார். அந்த கட்சி சார்பிலும் ஒடிசா முதல்வராகப் பதவி வகித்தார். கடந்த 1997 ஏப்ரல் 17-ம் தேதி பிஜு பட்நாயக் உயிரிழந்தார். இவரது உடலை ஒடிசாவின் புரி நகரில் உள்ள ஸ்வர்கத்வாரா (சொர்க்கம்) கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, அங்கு 600 சதுர அடியில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது.
தனது தந்தையின் மறைவுக்கு பிறகு அவரது மகன் நவீன் பட்நாயக் கடந்த 1997 டிசம்பரில் பிஜு ஜனதா தளம் கட்சியை தொடங்கினார். அந்த வகையில், கடந்த 2000 மார்ச் முதல் தற்போது வரை ஒடிசா மாநில முதல்வராக இருந்து வருகிறார். அவரது தனிச் செயலாளராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கார்த்திகேயன் பாண்டியன் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 16-ம் தேதி துபாய் சென்றார். அந்நாட்டில், வாழும் ஒடிசா மக்களுடன் உரையாற்றும் போது இவ்வாறு கூறினார் :
ஒடிசாவின் புரி நகரின் ஸ்வர்கத்வாரா கடற்கரை, புரி ஜெகநாதர் கோயிலில் இருந்து ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் உடல்களை தகனம் செய்தால் நேரடியாக சொர்க்கத்துக்கு செல்ல முடியும் என்பது ஒடிசா மக்களின் நம்பிக்கை.
இந்த தகன பூமியை மேம்படுத்த பிரம்மாண்டமான திட்டம் வரையறுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மாதிரியை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் நான் விளக்கி கூறினேன். தனது தந்தை பிஜு பட்நாயக்கின் நினைவிடம், திட்டத்துக்கு இடையூறாக இருப்பதை முதல்வர் கண்டறிந்தார். உடனடியாக தந்தை பிஜு பட்நாயக்கின் நினைவிடத்தை அங்கிருந்து அகற்ற முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டார்.
அப்போது முதல்வர் கூறும்போது, எனது தந்தை பிஜு பட்நாயக் மக்களின் மனங்களில் வாழ்கிறார். கல், செங்கல் கட்டிடத்தில் வாழவில்லை என்று விளக்கம் அளித்தார். பொதுமக்கள் மற்றும் கட்சியினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் அதிகாலை நேரத்தில் பிஜு பட்நாயக்கின் நினைவிடம் யாருக்கும் தெரியாமல் அகற்றப்பட்டது என வி.கார்த்திகேயன் பாண்டியன் கூறினார். மக்களுக்காக தந்தையின் நினைவிடத்தையே அகற்றிய முதல்வர் நவீன் பட்நாயக்கின் தன்னலமற்ற நடவடிக்கைகள் அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.