காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என காங்கிரஸ் துணை முதல்வர் கூறியிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இதையடுத்து, அம்மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் இருந்து வருகின்றனர். கூடுதல் பொறுப்பாக நீர்வளத்துறையை டி.கே.சிவகுமார் கவனித்து வருகிறார். அந்த வகையில், நீர்வளத்துறை அதிகாரிகளுடனான முதல் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்று முடிந்தது. அக்கூட்டத்தில், மேகதாதுவில் அணை கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது என்பது கர்நாடகாவின் நீண்டகால திட்டம். காவிரி நதிநீரை திசை திருப்புகிற கர்நாடகாவின் முயற்சிக்கு தமிழக பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று வரை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதல்வரின் கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கர்நாடகா சட்டசபை தேர்தல் களத்திலும் மேகதாது அணை தொடர்பான விவகாரம் எதிரொலித்தது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூ 9,000 கோடி நிதியை காங்கிரஸ் அரசு ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்காமல் கள்ள மெளனமாக இருப்பது தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.