தமிழகத்தில் நடக்கும் தி.மு.க. ஆட்சியில் வன்முறைகளுக்கும் அட்டூழியங்களுக்கும் சிறிதும் குறைவில்லை. தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிய நாள் முதல் தி.மு.க.வினர் அப்பாவி மக்கள் மீது வெளிப்படுத்தும் அராஜகங்கள் தொடர்கதையாகிவுள்ளது. ஆளும் கட்சி என்ற பெயரில் தொண்டர்கள், குண்டர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் என பலரும் மக்கள் சேவையில் ஈடுபடுவதை விட்டுவிட்டு தங்கள் அதிகாரத்தை காட்டுவதில் தான் அக்கறை காட்டுகின்றனர். இது குறித்து பொதுமக்கள் தரப்பில் பல புகார்கள் எழுந்தும் காவல்துறையால் நடப்பதை கைக்கட்டி வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது.
கடலுக்கு நடுவே பேனா சிலை அமைப்பதில் காட்டும் ஆர்வம் தலைநகரத்தில் நல்ல தரமான சாலைகள், உள்கட்டுமான அமைப்புகளை அமைப்பதில் இல்லை. தலைநகரத்திலேயே இந்த நிலை என்றால் மற்ற இடங்களை பற்றி கூறவேண்டியதில்லை. பட்டியலின மக்கள் மீதான அடக்குமுறைகள்
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் அதிகரித்துள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிய ஒரு மாதத்திலேயே பட்டியலின மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கிராமங்களில் செல்வாக்கு செலுத்தும் தி.மு.க. தலைவர்களால் அங்குள்ள பட்டியலின மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். உதாரணமாக, தி.மு.க. ஆட்சி அமைத்த சில வாரங்களிலேயே 2 பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்கள் அரக்கோணத்தில் கொல்லப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் கல்லரைபாடி பஞ்சாயத்து தலைவரான ஏழுமலை பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் பொது இடத்தில் தி.மு.க.வினரால் அவமானப்படுத்தப்பட்டார். திண்டிவனம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பட்டியலின மக்கள் தண்ணீர் தொட்டியை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.
இதேபோல் பிற மதங்களுக்கு மாறிய பட்டியலின மக்கள் தங்கள் இறந்த உறவினர்களின் உடலை பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய உள்ளூர் தி.மு.க. தலைவர்களால் அனுமதி மறுக்கப்படும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்துகொண்டு தான் இருக்கின்றது.
இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை பொறுக்கமுடியாத தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வன்மையாக கண்டித்தார்.
தமிழகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவோம் என்ற கொள்கையுடன் வந்த தி.மு.க. ஆட்சியில் தான் இந்த அவலங்கள் அதிகளவில் நடப்பதாக குற்றம்சாட்டினார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின்படி பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகளில் தமிழகம் பீகாரையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இருப்பதாக ஆளுநர் விமர்சித்தார். தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் பல ஆண்டுகளாக நடந்து வருவது உண்மை தான். ஆனால், சமீபகாலமாக அந்த கொடுமைகளை அரங்கேற்றுவது பெரும்பாலும் தி.மு.க.வினர் என்பது தான் இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியுள்ளது. ஆனால், தன் கட்சியை சேர்ந்தவர்களால் நடத்தப்படும் இந்த அராஜகங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எந்த எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிப்பதில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வருத்தப்படுவதாக முதலை கண்ணீர் வடிப்பதுடன் தன் கடமை முடிந்ததாக நினைக்கிறார். பட்டியலின மக்களுக்கு எதிரான தி.மு.க.வினரின் அடக்குமுறைகள் குறித்து ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களில் செய்தி வந்தாலும் அதற்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என்பது தான் வேதனை. ராணுவ வீரர் பலி தி.மு.க. ஆட்சியில் பட்டியலினத்தவர் மட்டுமல்ல தேசத்துக்காக பாடுபடும் ராணுவ வீரர்களுக்கும் எந்த மதிப்பும் இல்லை. நம் நாட்டை பாதுகாக்க தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் வெயிலும், மழையிலும் பாடுபாடும் ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு சான்றாக கடந்த மாதம் கிருஷ்ணகிரி அருகே உள்ளூர் தி.மு.க. கவுன்சிலருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ராணுவ வீரர் பிரபு அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் கண்டன பேரணிகள் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பல முன்னாள் ராணுவ வீரர்கள் இதில் பங்கேற்றனர். கேலிக்கூத்தான தமிழக காவல்துறை திமுக ஆட்சியில் தமிழக காவல்துறை தன் அதிகாரத்தை இழந்து கைபொம்மையாக மாறியுள்ளது. மக்கள் அளிக்கும் புகார்கள் மீது தன்னிசையாக எந்த நடவடிக்கையும் எடுக்கும் அதிகாரம் அவர்களிடம் இல்லை. பாதுகாப்பு விஷயத்திலும் அஜாக்கிரத்தையான மனநிலையே நிலவுகிறது.
இதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு கோவையில் நடந்த கார் வெடிகுண்டு சம்பவத்தை கூறலாம். தமிழகத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தேசிய புலனாய்வு நிறுவனம் தொடர்ந்து எச்சரித்தும் காவல்துறையும் உளவுத்துறையும் முடங்கி கிடந்ததால் அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தடுக்க முடியவில்லை. ஆனால் கடவுள் அருளால் அந்த சம்பவத்தில் ஆட்டோவில் வெடிகுண்டை கொண்டு சென்ற பயங்கரவாதியை தவிர வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த சம்பவத்திற்கு பின் தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழ ஆரம்பித்தவுடன் தான் அவசர அவசரமாக விசாரணைகள் முடக்கிவிடப்பட்டன.
தமிழகத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்த பின்பும் அது குறித்து முதல்வர் ஸ்டாலின் சுமார் 3 நாட்களுக்கு எந்த கருத்தும் கூறாமல் இருந்தது அரசியல் வட்டாரத்தில் பேச்சுபொருளானது. ஆனால் அதை பற்றியெல்லாம் ஆளும் தி.மு.க. அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை.
அடுத்தப்படியாக சில தினங்களுக்கு முன் திருச்சியில் நடந்த சம்பவம் தி.மு.க.வினர் கையில் காவல்துறை எப்படி செயல்படுகிறது என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.
திருச்சியில் தி.மு.க .அமைச்சர் கே.என். நேரு விளையாட்டு அரங்கம் ஒன்றை திறந்து வைக்க வந்த போது அதற்கான ஃபிளக்ஸ் போர்டில் திருச்சி எம்.பி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் கே.என். நேருவின் கார் வரும் போது கருப்பு கொடியுடன் எதிர்ப்பு தெரிவித்தனர். அவ்வாறு கருப்பு கொடி காட்டியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பத்தால் ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
அவரது வாகனங்களை சேதப்படுத்தினர். இத்தோடு நிற்காமல் காவல்நிலையத்தில் இருந்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் மீதும் காவல்நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அங்குள்ள காவலர்களால் இதை தடுக்க முடியவில்லை. தி.மு.க. ஆட்சியில் காவலர்களுக்கோ காவல்நிலையங்களுக்கோ எந்த மரியாதையும் இல்லை என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். இந்த சம்பவம் கடும் விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் தி.மு.க. தரப்பில் சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை தவிர பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லை.
மக்களை பாதுகாக்க வேண்டிய ஆளும் கட்சி தன் கடமையை செய்யாமல் மக்கள் நலனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மனதில் ஆளுங்கட்சி மீதான கோபம் அதிகரிக்க துவங்கியுள்ளது. மக்கள் எப்போது விழித்து கொள்கிறார்களோ அன்று இவர்களின் ஆட்டம் முடிந்துவிடும்.