போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞரை மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் எட்டி உதைத்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்களில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பொங்கல் தினம் தொடங்கி, கடந்த பல வாரங்களாக அனுமதி கேட்டும் தி.மு.க. அரசு செவி சாய்க்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் சென்னை டூ பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு மாநில எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, கூட்டத்தை கலைக்கும் வகையில், கண்ணீர் புகை குண்டு மற்றும் தடியடியை காவல்துறையினர் நடத்தினர். இதில், ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தவகையில், நேற்றைய தினம் கிருஷ்ணகிரியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டு இருந்தன. இந்த நிலையில்தான், அம்மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் தாகூர் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை தனது லத்தியால் அடித்தும், காலால் எட்டி உதைத்த காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு காவலர்களுடையது. ஆனால், உயர் அதிகாரி ஒருவர் சட்டத்தை தனது கையில் எடுத்து கொண்டு, அராஜக செயலில் இறங்கி இருப்பது கடும் கண்டனத்திற்குறியது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.