சென்னை பெரும்பாக்கம் பணிமனையில் 20 நிமிடங்களாக காத்திருந்தும் பேருந்தை இயக்காததை தட்டிக்கேட்ட பெண் பயணியை ஓட்டுநர் மிருகத்தனமாக தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதான் பெண்களுக்கு தி.மு.க. அரசு கொடுக்கும் மரியாதையா என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம், எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் நிகழ்த்தி வரும் அட்டூழியங்கள், அடாவடிகள் குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்கள், காட்சி ஊடகங்களில் வந்த வண்ணம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியையும், பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், சென்னை பெரும்பாக்கம் பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர், பெண் பயணி மீது மிருகத்தனமாக தாக்குதல் நடத்தி இருக்கிறார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவத்திற்கு பொதுமக்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அரசுப் பேருந்துகளை பொறுத்தவரை, தங்களுக்கு எங்கு ஓசியில் உணவு கிடைக்கிறதோ, அந்த ஹோட்டலில் பஸ்ஸை நிறுத்தி பயணிகளை அவதிக்குள்ளாக்குவது டிரைவர், கண்டக்டர்களின் வாடிக்கையாக இருக்கிறது. தவிர, தமிழக அரசுப் பேருந்துகளின் தரம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் மேற்கொள்ளும் வகையில்தான் இருக்கின்றன. நிலைமை இப்படி இருக்க, பஸ்ஸை எடுக்க தாமதமானதை தட்டிக் கேட்ட அப்பாவிப் பெண் பயணி மீது ஓட்டுனர் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, அந்த ஓட்டுனரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் குரல் கொடுக்கிறார்கள். மேலும், இதன் மூலம் பெண்களுக்கு உரிய மரியாதைகூட வழங்கத் தெரியாத அரசாக தி.மு.க. அரசு மாறி வருகிறது என்பது நெட்டிசன்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.