பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்… 44 பேர் பலி!

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்… 44 பேர் பலி!

Share it if you like it

பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்திருக்கிறது பஜார் மாவட்டம். இங்கு பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்த சூழலில், இங்கு ஜாமியத் உலமா இஸ்லாம் ஃபஸ்ல் என்கிற அரசியல் கட்சியின் மாநாடு நேற்று நடந்தது. இக்கட்சி ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சி என்பதால், இம்மாநாட்டில் 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடியின மக்கள்தான். இம்மாநாட்டில் திடீரென தற்கொலை படை தாக்குதல் நடந்தது.

இதில், ஜாமியத் உலமா இஸ்லாம்-ஃபஸ்ல் கட்சியின் முன்னாள் தலைவர் ஜியாவுவல்லா ஜான் உட்பட 44 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவத்திற்கு அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இதற்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it