தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்க உறுதியாக இருப்பேன் என்று அமைச்சர் கே.என்.நேரு பேசியிருப்பது பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அரசு வேலை என்பது இளைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. எப்படியும் அரசு வேலை கிடைத்து விடாதா என்கிற ஆசையில் இளைஞர்கள் இரவு பகலாகப் படித்து, போட்டித் தேர்வுகளை எழுதி வருகின்றனர். இந்த சூழலில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு பணிகளில் ஒப்பந்த ஊழியர்களாக இருந்தவர்களை மாற்றிவிட்டு, தி.மு.க.வைச் சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தி வருகிறார்கள். உதாரணமாக, அம்மா உணவகத்தில் பணிபுரிந்த அ.தி.மு.க.வினர் அனைவரையும் மாற்றிவிட்டு புதிதாக ஆட்களை போட்டிருக்கிறார்கள். இதே நிலைதான், சாலைப் பணி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிங்களில் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் வருகிற 11-ம் தேதி 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருப்பதால், விழாவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. மேலும், விழாவுக்காக பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், சேலத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் அமைச்சர் நேரு பேசியிருக்கிறார். இந்நிகழ்ச்சியில்தான், ‘தி.மு.க.வினருக்கு நிச்சயம் அரசு பணி கிடைக்க நான் உறுதியாக இருப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்களின் கனவான அரசு வேலையை கட்சியினருக்கு வழங்குவதாகக் கூறியது இளைஞர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.