பார் நடத்த மாதம் 50,000 ரூபாய் கமிஷன் தரவேண்டும் என்று டாஸ்மாக் பார் உரிமையாளரை தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஒருவர் மிரட்டும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, எங்கு பார்த்தாலும் லஞ்சம், மாமூல், கமிஷன் என்று தமிழகம் முழுவதும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இதனால், கழிவுநீர் கால்வாய் அமைப்பது முதல் பள்ளிக்கு காம்பவுண்டு சுவர் கட்டுவதுவரை தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருகிறது. மக்கள் உயிருடனும், மாணவர்கள் உயிருடனும் விளையாடி வருகிறது தி.மு.க. அரசு. இதை மெய்ப்பிக்கும் வகையில், தி.மு.க. நிர்வாகிகள் கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் கேட்கும் ஆடியோ மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
அதேபோல, டாஸ்மாக் கடைகளில் மாதம்தோறும் 50,000 ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கமிஷன் தர வேண்டும் என்று கரூர் கம்பெனி ஒருபுறம் மிரட்டி வருகிறது. இன்னொருபுறம், தி.மு.க. நிர்வாகிகளும் அவ்வப்போது கமிஷன் கேட்டு அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன. இந்த நிலையில்தான், தி.மு.க. நிர்வாகி ஒருவர் டாஸ்மாக் பார் உரிமையாளரிடம் மாதம் 50,000 ரூபாய் கமிஷன் கேட்டு மிரட்டும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருப்பவர் வெற்றி விஜயன். இவர், அப்பகுதியிலுள்ள டாஸ்மாக் பார் உரிமையாளர் ஒருவரிடம், நீ மட்டும் பார் நடத்தினால் மாதம் 25,000 ரூபாய் கொடுத்தால் மட்டும் போதும். அதேசமயம், அவனுடன் சேர்ந்து நடத்தினால் மாதம் நீ 25,000 ரூபாய், அவன் 25,000 ரூபாய் என மொத்தம் 50,000 ரூபாய் கமிஷன் தர வேண்டும். இல்லாவிட்டாலும் எங்க அடிக்கணுமோ அங்க அடிச்சு பார் நடத்தவிடாமல் செய்து விடுவேன். எம்.எல்.ஏ.விடம் சொல்லி பாரை காலி செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
இந்த ஆடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தி.மு.க. ஆட்சி வந்தாலே கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷன் என்பது சகஜம்தானே என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.