இந்தியாவின் அணுகுமுறை மாறிவிட்டது: ஜெய்சங்கர் பெருமிதம்!

இந்தியாவின் அணுகுமுறை மாறிவிட்டது: ஜெய்சங்கர் பெருமிதம்!

Share it if you like it

எல்லை பாதுகாப்பதில் நமது நாட்டின் அணுகுமுறை முற்றிலும் மாறிவிட்டது என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

உகாண்டாவில், அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், அந்நாட்டின் தலைநகர் கம்பாலாவில் வசித்து வரும் இந்தியர்களிடையே உரையாற்றும் போது இவ்வாறு கூறினார் :

”எழுந்து நிற்கத் தயாராக இருக்கும் வித்தியாசமான இந்தியாவை தற்போது மக்கள் பார்க்கிறார்கள். கடந்த 2016-ல் ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கான பதிலடியாக இருந்தாலும் சரி, 2019-ல் நிகழ்ந்த புல்வாமா தாக்குதலுக்கான பதிலடியாக இருந்தாலும் சரி, தேசிய பாதுகாப்பு சவால்களை திறம்பட எதிர்கொள்ளக்கூடிய புதிய இந்தியாவை மக்கள் பார்க்கிறார்கள். எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களை பல பத்தாண்டுகளாக சகித்து வந்த இந்தியா தற்போது இல்லை. இது பதிலடி கொடுக்கக்கூடிய வித்தியாசமான இந்தியா.

இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறி கடந்த 3 ஆண்டுளாக சீனா எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. இந்தியாவும் பதிலுக்கு கடினமான வானிலை நிலவும் மலை உச்சியிலும் தனது படைகளை நிறுத்தியுள்ளது. இதற்கு முன் இந்தியா இப்படி இருந்தது இல்லை. அதுமட்டுமல்ல, சீன எல்லையை ஒட்டி நாம் பல்வேறு உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி இருக்கிறோம். இதுபோன்ற கட்டமைப்புகள் முன்பே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அப்போது நடக்கவில்லை. தற்போது நடக்கிறது.

சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை இந்தியா கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெயை எந்த நாட்டிடம் வாங்க வேண்டும், எந்த நாட்டிடம் வாங்கக் கூடாது என யாரும் தற்போது நமக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. நாட்டு மக்களின் நலன் கருதி இந்தியா சுதந்திரமாக முடிவுகளை எடுத்து வருகிறது என பேசினார்.


Share it if you like it