தேசிய அளவில் பாஜகவை திட்டமிட்டு அவமதிக்க பார்க்கும் திராவிடம் – துணை போகும் உச்ச நடிகர்

தேசிய அளவில் பாஜகவை திட்டமிட்டு அவமதிக்க பார்க்கும் திராவிடம் – துணை போகும் உச்ச நடிகர்

Share it if you like it

தமிழகத்தில் திரையுலகில் நீண்ட நெடிய பயணம் கொண்ட நடிகர் ஒருவர் ஒரு அரசியல் கட்சியை தொடங்கி தமிழகத்தில் ஆளும் ஆண்ட கட்சிகளுக்கு பெரும் சவாலாக வளர்ந்து வந்த நிலையில் கட்சியின் தலைவர் ஊடகங்களின் துணையுடன் திட்டமிட்டு அவமதிக்கப்பட்டதும் தொடர்ச்சியான சதிகளால் அவரின் மக்கள் செல்வாக்கு தேர்தல் வெற்றி எல்லாம் தகர்க்கப்பட்டு அவரின் செயல்பாடுகள் கட்சி அரசியல் என்று அனைத்தும் முடக்கப்பட்டதும் சமீபத்திய வரலாறு. அதே தமிழ் திரையுலகில் இருந்து ஒரு நடிகரையும் ஒரு இயக்குனரையும் இரண்டு அமைப்புகள் உருவாக்கி இந்நாளில் அதை அரசியல் கட்சிகளாக மாற்றியமைத்ததும் அவர்கள் இருவரையும் தங்களுக்கு எதிரான வாக்கு வங்கியை பிரிக்கும் வியூகமாக இன்று வரை பயன்படுத்தி வருவதும் சமகால வரலாறு. அதே திரையுலகில் இருந்து புதிதாக கட்சி தொடங்க முயற்சிக்கும் ஒரு நடிகரை அவரது சித்தாந்தம் மற்றும் அரசியல் செயல்பாடுகள் முழுவதுமாக தங்களின் கட்சி அரசியலையும் தங்களின் சார்புள்ள கூட்டணி கட்சி அரசியலையும் வாக்கு வங்கியையும் கடுமையாக சேதப்படுத்தும் என்பதால் அதை எதிர்ப்பதும் ஆரம்பத்திலேயே அதை முடக்க வேண்டும் என்பதற்காக பெரும் பிரயத்தனம் செய்வதையும் கண் முன்னே பார்க்கிறோம்.

எல்லா வகையிலும் தமிழகத்தின் அரசியல் களமும் தேர்தல் வெற்றி வாய்ப்பும் தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். இல்லையேல் அனைத்தையும் தங்களுக்கு சாதகமாக எந்த விலை கொடுத்தேனும் மாற்ற வேண்டும். அதற்கு உடன்படாத நபர்களையும் தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களையும் தடுக்கவும் அழிக்கவும் எந்த எல்லைக்கும் போகலாம் அது எல்லாம் அரசியல் சாதுரியம் ராஜதந்திரம் என்ற தவறான முன்மாதிரியாக இருக்கும் தமிழக அரசியல் களம் தற்போது தமிழகத்தில் மக்களிடையே நிலவும் ஒரு மாபெரும் மன மாற்றம் தேசிய எழுச்சி நேர்மையான நல்லாட்சியை விரும்பும் மனோநிலை கண்டு அதிர்ந்து நிற்கிறது. இதற்கெல்லாம் காரணமானவர்களையும் அவர்களை பின் இருந்து இயக்குபவர்களையும் பெரும் ஆளுமைகளாக இருப்பவர்களையும் முளையிலேயே அடக்கவும் அழிக்கவும் தன்னாலான அனைத்தையும் செய்து வருகிறது. தங்களது குடும்ப நிறுவனம் சார்பில் ஒரு திரைப்படத்தை வெளியிட்ட அதிகாரக் குடும்பம் அதில் நடித்த உச்ச நடிகரின் மூலமாக ஒரு பெரும் திட்டத்தை அரங்கேற்ற பார்த்து அது தவிடு பொடியானதில் வெளிப்படையாக அழவும் முடியாமல் எதிர்த்து பேசவும் முடியாமல் தேள் கொட்டிய திருடனை போல விழிக்கிறது.

சமீபத்தில் அதிகார குடும்பத்தின் துணைக் குடும்ப நிறுவனம் சார்பில் ஒரு திரைப்படம் வெளியானது . அதில் நடித்த உச்ச நடிகர் நீண்ட காலமாக அரசியலுக்கு இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று போக்கு காட்டியவர். ஒரு கட்டத்திற்கு பிறகு கட்சி ஆரம்பிக்கிறேன் என்ற பெயரில் ஒரு அறிவிப்பை கொடுத்து அதற்கு பெரும் பிரயத்தனம் செய்து இறுதியில் தன் சொந்த காரணங்களை நியாயமாக முன்வைத்து பின்வாங்கிக் கொண்டவர். தொடர்ந்து அதிகார குடும்பத்தின் படங்களில் வலம் வருபவர் சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படம் அதன் வாயிலான ஒரு பெரும் வியூகம் என்று தலைமை குடும்பத்திற்கு பகடையாக போய் இன்று அவரின் பொய் முகம் கிழிந்து நிற்கிறார்.

திரைப்படம் வெளியானவுடன் குடும்பத்தோடு கோவிலுக்கு போய் சாமி கும்பிடுவது நல்ல விஷயம் தான். அதிலும் அவரைப் போன்ற வசதி படைத்த நபருக்கும் தன்னை ஆன்மீகவாதியாக அடையாளப்படுத்திக் கொள்பவருக்கு அயோதியில் ராமஜென்ம பூமிக்கு போய் சாமி கும்பிடுவது ஒரு பெரிய விஷயம் இல்லை .அதற்காக அவர் குடும்பத்துடன் பிரயாணம் செய்தது தவறு இல்லை . அயோத்தி ராமஜென்ம பூமிக்கு சாமி கும்பிட போனவர் உத்திரபிரதேசத்தில் இருக்கும் மாநில ஆளுநர் முதல்வர் உள்ளிட்ட அதிகார பீடங்களை பார்க்க நினைத்தது ஏன் ? என்ற கேள்வி நெருடுகிறது.

கட்சி அரசியலுக்கு வர முடியாது இனி எந்த காலமும் வரமாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்து அதற்கு நியாயமான காரணங்களை எடுத்துச் சொல்லி பின் வாங்கியவர். எதற்காக சம்பந்தமில்லாத ஒரு மாநிலத்தின் ஆட்சியாளர்களை பார்க்க வேண்டும் ?அதிலும் அவர் சந்தித்த ஆளுமைகள் அத்தனை பேரும் அவரின் திரைப்பட த்தின் காரண கர்த்தாக்களுக்கு அரசியல் எதிரிகளாகவும் சித்தாந்த எதிரிகளாகவும் இருப்பவர்கள். சரி தனது சித்தாந்தம் மற்றும் சொந்த விருப்பம் அடிப்படையில் அந்த ஆட்சியாளர்களை அவர் போய் பார்த்து இருக்கலாம் என்று சமாதானம் செய்து கொள்ள முயன்றால் அப்படி போனவர் அவர்களை திரைப்படம் பார்க்க அழைத்ததன் காரணம் என்ன என்ற கேள்வி அடுத்த எழுகிறது .

உத்திர பிரதேசத்தை ஆண்டு கொண்டு இருப்பவர் கட்சி அரசியல்வாதி என்பதை கடந்து அவர் ஒரு சந்நியாசி. தன்னைவிட வயதில் இளையவராக இருந்தால் கூட அவர் ஒரு அப்பழுக்கில்லாத ஆன்மீகவாதி . அவரின் தவ வாழ்க்கை போற்றுதலுக்குரியது என்பதை எல்லாம் உணர்ந்து அவர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறும் ஒரு ஆன்மீகவாதிக்கு ஒரு சன்னியாசியை துறவியை யோகியை திரைப்படம் பார்க்க வாருங்கள் என்று அழைப்பது தவறு என்பது தெரியாதா? . உல்லாசம் – கேளிக்கை – பொழுதுபோக்கு என்ற அர்ப்பத்தனமான விஷயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஞானிகள்தான் துறவிகளும் சன்னியாசிகளும் என்ற அடிப்படை ஆன்மீக நெறியை அந்த உச்ச நடிகர் அறியாதவரா ?.

ஒரு ஆன்மீகவாதியாக ஒரு சன்யாசி யின் காலில் விழுந்த ஆசி பெற்றவர் . அதே ஆன்மீக அடிப்படையில் அவர் சார்ந்த தமிழகத்தின் சித்தர் கோரக்கர் நிறுவிய கோரக்பூர் மடத்தை போய் சுற்றி பார்த்திருக்கலாம். அல்லது அதற்கு ஏதாவது ஆக்கபூர்வமாக செய்து கொடுத்திருக்கலாம் . இவர் முன்னெடுக்கும் ஏதேனும் ஒரு ஆன்மீக விஷயத்தைப் பற்றி அவரிடம் எடுத்துரைத்து ஆலோசனை பெற்றிருக்கலாம். இவர் செய்யும் ஏதேனும் ஆன்மீக விஷயத்தை பார்வையிட அல்லது அதற்கு வேண்டிய பங்களிப்பை வழங்க வருமாறு அந்த சன்னியாசிக்கு அழைப்பு விடுத்திருந்தால் நிச்சயம் அது போற்றுதலுக்குரியதாக இருந்திருக்கும். அது மக்கள் மத்தியில் அந்த உச்ச நடிகருக்கு பெரும் நன்மதிப்பை தேடிக் கொடுத்திருக்கும்.

இவர் ஒரு ஆன்மீகவாதியாக ஆலயம் தரிசனம் செய்வது அவரின் விருப்பம் .அங்குள்ள ஆட்சியாளர்களை சந்திக்கும் அளவில் இருப்பதும் அவருடைய செல்வாக்கு தனிப்பட்ட விஷயம். ஆனால் எதிர்காலத்தில் பிரதம வேட்பாளர் சமகாலத்தில் தலை சிறந்த முதல்வர் என்ற பெரும் நேர்மறை பிம்பத்தோடும் மக்களிடையே பெரும் செல்வாக்கும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு எதிரிகளுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக இருக்கும் ஒரு சந்நியாசியை திரைப்படம் பார்க்க வாருங்கள் என்று கேட்பதன் பின்னணி சாதாரணமாக கடந்து போகும் விஷயம் இல்லை .

இவரின் அழைப்பை உதாசீனப்படுத்த மனமின்றி அவர் தனது சகாக்களில் ஒருவரை திரைப்படம் பார்க்க அனுப்பி வைத்ததும் அவரும் பணி நிமித்தம் காரணமாக பாதியில் கிளம்பி போனதுமாக செய்திகள் வெளியாகிறது. கடந்த காலத்தில் அந்த உச்ச நடிகரின் ஆதரவை கேட்டு தற்போது பிரதமர் பதவியில் இருக்கும் பாஜகவின் ஆளுமை அந்த உச்ச நடிகரின் வீட்டிற்கு வந்து ஆதரவு கேட்டதும் அவரை வீட்டில் உள்ளே வைத்துக் கொண்டு வெளியில் வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து எந்த கட்சிக்கும் என்னுடைய ஆதரவு இல்லை நான் எப்போதும் போல் அமைதியாக என் வழியில் இருக்கிறேன் என்று அந்த உச்ச நடிகர் பேட்டி கொடுத்ததும் கவனிக்கத்தக்கது.

தன் வழியில் தன் இயல்பில் அவருக்கு இருக்க உரிமை உண்டு எனில் ஒரு சந்நியாசியின் இயல்பை மாற்றி கேளிக்கை பார்க்க அழைப்பது எப்படிப்பட்ட ஆன்மீகம்? ஒருவேளை இவரின் அழைப்பை ஏற்று அவர் வந்திருந்தால் படம் பார்க்கும் சன்னியாசி தியேட்டரில் விசில் அடித்து குத்தாட்டம் போட்ட பாஜக துறவி என்று எவ்வளவு ஏச்சுப் பேச்சுகளுக்கும் இட்டுக்கட்டிய விஷம பிரச்சாரங்களுக்கும் அவர் ஆளாகி இருப்பார் ? என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இந்த உச்ச நடிகரின் சந்திப்பையும் பார்ப்பதற்கான அனுமதியையும் உத்திரபிரதேசத்தில் இருக்கும் முதல்வரும் மாநில ஆளும் தலைமை அதிகாரிகளும் மறுத்திருக்கும் பட்சத்தில் பாஜகவிற்கு இவர் ஆதரவு தரவில்லை அதை மனதில் வைத்து தான் அவரை புறக்கணித்தார்கள் என்ற ஒரு பிரச்சாரமும் மறுபக்கம் தமிழகத்தின் தலைமை குடும்பத்தின் நிறுவன படம் என்பதால் தான் அந்த படத்தையும் அதில் நடித்த நடிகரையும் புறக்கணித்தார்கள் என்று ஒரு வெறுப்பு அரசியலையும் திட்டமிட்டு கட்டமைத்து இருப்பார்கள்.

திராவிடத்தின் சூழ்ச்சி அரசியலையும் அதன் மூலம் யாரெல்லாம் எப்படி எல்லாம் வீழ்த்தப்பட்டார்கள்? எப்படியெல்லாம் வீழ்த்த சதிகள் அரங்கேறுகிறது? என்பதை எல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கும் பாஜகவின் ஆளுமைகள் அவர்களின் பாணியிலேயே அவர்களை எதிர்கொள்ளவும் வேண்டும் அதற்கு உரிய வகையில் பதிலடி கொடுக்கவும் வேண்டும் என்ற வகையில் வந்த நடிகரை வரவேற்று உபசரித்து அவர்கள் மாண்பையும் பாதுகாத்துக் கொண்டார்கள். அயோத்தி தரிசனத்திற்கும் இதர பிரயாணத்திற்கும் தேவையான முழு ஒத்துழைப்பையும் மாநில அரசு எந்திரம் மூலம் செய்து கொடுத்து தங்களின் கடமையையும் சரிவர செய்து விட்டார்கள். மறுபுறம் தான் ஒரு யோகி சன்னியாசி கேளிக்கைகளுக்கு தன் வாழ்வில் இடம் இல்லை என்ற வகையில் தனது மாண்பையும் பாதுகாத்துக் கொண்டு அழைப்பு விடுத்தவரின் மரியாதைக்காக தன் சகாவை அனுப்பி வைத்ததும் மரியாதைக்கு கொஞ்ச நேரம் இருந்து விட்டு தன் அலுவலர் பார்க்க அவர் கிளம்பி போனதும் அவர்களின் அரசியல் நாகரீகத்தை பட்டவர் தனமாக காண்பித்து விட்டது.

அதே நேரத்தில் மாமரத்தில் கல்லை விட்டு எறிவோம். விழுந்தால் மாம்பழம் போனால் கல்தான் அதுவும் விழப்போவதும் எதிரியின் தலையில் தான் என்று பெரும் எதிர்பார்ப்போடு உச்ச நடிகரை அனுப்பி ஆழம்பார்த்த திராவிடம் இன்று எங்களுக்கு அரசியலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இல்லை . தனிப்பட்ட எதிரிகளும் இல்லை. எங்களுக்கு எங்களின் சித்தாந்தமும் தேசியமும் தான் முக்கியம் . அதை தவிர மற்ற யாவும் யாரும் எங்களுக்கு அற்பம் தான். நாங்கள் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் எதையும் துணிவோடு எதிர் கொண்டு கடந்து போகும் தேசியவாதிகள் ஆன்மீகவாதிகள். எங்களை எதிர்க்கவும் வெற்றி கொள்ளவும் எங்களை விட மேலான தேசியவாதிகளாலும் ஆன்மீகவாதிகளாலும் மட்டுமே முடியும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டது

மறுபுறம் எந்த நடிகரை வைத்து அரசியல் கட்சி என்ற அறிவிப்பை விட்டு தமிழக அரசியல் களத்தில் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தினார்களோ ? எந்த நடிகரை வைத்து அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்று தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கும் போது அறிவிப்பை கொடுத்து நடுநிலையாளர்களையும் அவரின் ரசிகர்கள் ஆதரவாளர்கள் என்று சொல்பவர்களையும் பெரும் குழப்ப நிலையில் நிறுத்தி திட்டமிட்ட விஷம பிரச்சாரங்களால் அவர்கள் அனைவரையும் தங்கள் பக்கம் திருப்பி தேர்தலில் வெற்றியை சாதித்தார்களோ? சாதித்த பெருமிதத்தில் அந்த நடிகரை தொடர்ந்து தங்களின் குடும்ப படங்களில் முன்னிறுத்துவதையும் இன்று ஆன்மீகவாதி என்ற போர்வையில் அந்த உச்ச நடிகரையே ஏவி விட்டு தங்களை ஆழம் பார்ப்பதையும் அவர்கள் அறியாமல் இல்லை. அவர்கள் பாணியிலேயே திராவிடத்திற்கும் பதிலளித்து தங்களின் மாண்பையும் காத்துக் கொண்டு திராவிட அரசியலுக்கும் அவர்களின் ஏவலாக பாய்ந்த அம்பிற்கும் பதிலடியாக நீங்கள் படித்த பள்ளிகளில் நாங்கள் தலைமை ஆசிரியர்கள் என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கிறது.

ஒரு கட்சியின் தேசிய ஆளுமை பிரதமர் வேட்பாளர் ஒரு நடிகரின் வீடு தேடி வந்து ஆதரவு கேட்கும் முன் அது விஷயமாக எத்தனை முன் ஆய்வுகள் கலந்துரையாடல் இருந்திருக்கும்?. அத்தனையும் கடந்து வந்தவரை முகத்தில் அடித்தது போல் பேசி யாரையோ திருப்தி படுத்தியவர் இன்று தனது சுயரூபம் தெரிந்து தன்னை விட்டு அவர்கள் விலகி நிற்பதை பார்த்து இடைவெளியை நிரப்ப தேடி போகிறார் என்ன ஒரு சந்தர்ப்பவாதம்.? தனது நடுநிலை காண்பித்து தனது திரைப்பட தொழில் வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் பாஜக தலைமையோடு நெருக்கம் காண்பித்து தலைமை குடும்பத்திடமும் தன் ஆளுமையை காட்ட வேண்டும் என்ற தந்திரம் எல்லாம் சரிதான்.

தனது காவி சாயம் என்ற வெளிப்படையான பேச்சால் தனது சுயரூபம் உணர்ந்த ஒரு சாரார் தனது திரைப்படத்தை புறக்கணித்தால் என்னவாகும் ?அதன் பிறகு தனக்கான மவுசு தலைமை குடும்பம் புறக்கணித்தால் அடுத்த படம் மார்க்கெட் என்னவாகும்? என்று சுதாரித்து இராமர் கோயில் வழிபாடு யோகியின் ஆசி என்ற இராஜதந்திரம் எல்லாம் சரி. தனது திரைப்படத்தில் காவி கொடி காட்டி குறிப்பிட்ட சாராரின் ஆதரவு மூலம் வெற்றி பெற்ற பிறகு திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப் பார்த்ததை போல் தன் மீதும் காவி சாயம் பூச பார்க்கிறார்கள் என்று தீட்டிய மரத்தில் கூறு போட்டவர் அடுத்த ஆறு மாதம் கழித்து இராமனுக்கு காவி சாயம் பூசி யதை போல் தன் மீதும் பூச பார்க்கிறார்கள் என்று பேசாதிருந்தால் சரி.


Share it if you like it