ஜக்கம்மா சொல்றா… ஜக்கம்மா சொல்றா… ஈரோட்டில் பல்லிளித்த பகுத்தறிவு!

ஜக்கம்மா சொல்றா… ஜக்கம்மா சொல்றா… ஈரோட்டில் பல்லிளித்த பகுத்தறிவு!

Share it if you like it

குடுகுடுப்பைக்காரர் போல் வேடமணிந்த ஒருவரிடம், தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் குறிகேட்டிருக்கும் சம்பவத்தை வைத்து நெட்டிசன்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா., சமீபத்தில் திடீர் மாரடைப்பு காரணமாக உயரிழந்தார். இதைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு எதிர்வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுக்கிறது. இதில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். வேட்பாளர் இளங்கோவன் தேர்தல் பிரசாரத்துக்கு வராத நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, அன்பில் மகேஷ் உட்பட பலரும் ஈரோட்டில் முகாமிட்டு, தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த தலைமைக் கழகப் பேச்சாளரான சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம் உலிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த கோவிந்தன், குடுகுடுப்பைக்காரன்போல் வேடமணிந்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறார். இவர், ஏற்கெனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மற்றும் அரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல்களிலும் குடுகுடுப்பைக்காரன் வேடமிட்டு பிரசாரம் செய்திருக்கிறார். தவிர, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது வேலூர் தொகுதியிலும், 2021 சட்டமன்றத் தேர்தலின்போதும் இதேபோல குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து பிரசாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தற்போது ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து பிரசாரம் செய்து வருகிறார். ஜக்கம்மா சொல்றா… ஜக்கம்மா சொல்றா… இந்த தேர்தல்ல இளங்கோவன் ஜெயிக்கப்போறார்னு ஜக்கம்மா சொல்றா… என்று குடுகுடுப்பையை அடித்தபடி பிரசாரம் செய்துவருகிறார். இதை மக்கள்தான் வித்தியாசமாக வேடிக்கை பார்க்கிறார்கள் என்றால், அமைச்சர்களும் கோவிந்தனுடன் சேர்ந்து பிரசாரம் செய்வதுதான் வேடிக்கை. அதாவது, தி.மு.க. என்றாலே பகுத்தறிவு பேசும் கட்சி. எதற்கெடுத்தாலும், பகுத்தறிவு, சமூகநீதி, சுயமரியாதை என்பார்கள். ஆனால், அதை அவர்களே கடைப்பிடிக்க மாட்டார்கள் என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாகி இருக்கிறது.

அந்த வகையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரசாரம் செய்து வரும் குடுகுடுப்பைக்காரன் கோவிந்தனிடம் குறிகேட்பதுபோல அமைச்சர்கள் பலரும் அவருடன் வலம் வருகிறார்கள். இந்த சூழலில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், குடுகுடுப்பை கோவிந்தனுடன் பிரசாரம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்துவிட்டுத்தான் பலரும் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, ஈரோட்டிலேயே தி.மு.க.வின் பகுத்தறிவு பல்லிளித்து விட்டதாக நெட்டிசன்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் தி.மு.க.வின் இத்தகைய செயலை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்திருக்கும் அண்ணாமலை, “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் பிரசாரகர் ஜக்‍கம்மா. முரணான விஷயங்கள். பெரியாரின் பேரன் ஜக்கம்மா மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார். தமிழ்நாட்டின் சுவாரஸ்யங்கள்” என்று தி.மு.க.வினரையும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனையும் விமர்சனம் செய்திருக்கிறார்.


Share it if you like it