பா.ஜ.க. அரசை வீழ்த்த முட்டி போட்டு ஜெபிப்போம்… கிறிஸ்தவ மத போதகராக மாறிய தி.மு.க. எம்.எல்.ஏ.!

பா.ஜ.க. அரசை வீழ்த்த முட்டி போட்டு ஜெபிப்போம்… கிறிஸ்தவ மத போதகராக மாறிய தி.மு.க. எம்.எல்.ஏ.!

Share it if you like it

2021 சட்டமன்றத் தேர்தலில் எப்படி முட்டி போட்டு ஜெபித்து தி.மு.க. ஆட்சியைக் கொண்டு வந்தோமோ, அதேபோல 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முட்டி போட்டு ஜெபித்து பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று திருச்சி கிழக்குத் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் பிரதிநிதி மதம் சார்ந்து பேசியிருப்பதால், அவரை எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.

மதுரையில், பெந்தேகோஸ்தே திருச்சபைகள் மாமன்றத்தின் 4-வது தேசிய மாநாடு கடந்த 8-ம் தேதி நடந்தது. இம்மாநாட்டில் வருவாய்த்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவரும், திருச்சி கிழக்குத் தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான இனிகோ இருதயராஜ், இயேசு அழைக்கிறார் சபையின் தலைவர் பால் தினகரன், பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றத் தலைவர் பேராயர் டேவிட் பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் பேசிய இனிகோ இருதயராஜ், “கிறிஸ்தவ மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை பா.ஜ.க. அரசு நிறுத்தி விட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய 88 கோடி ரூபாய் இனிமேல் கிடைக்காது. கர்நாடகாவில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அதேபோல, நாடு முழுவதும் மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கிறார்கள். இவ்வழக்கில் எங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று போராடி தற்போதுதான் வழக்கறிஞர்கள் மூலம் இணைந்திருக்கிறோம். மேலும், பொது சிவில் சட்டம் கொண்டுவர ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

அதோடு, கிறிஸ்தவர்களை பார்த்து பா.ஜ.க.வைச் சேர்ந்த ஹெச்.ராஜா, அண்ணாமலை ஆகியோரெல்லாம் அவதூறாகப் பேசி வருகிறார்கள். ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் மத போதகர்களின் நிலையை எண்ணிப் பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால், தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்தியாவின் தலைமைப் பதவியில் அமர வேண்டும். ஆகவே, 2021 சட்டமன்றத் தேர்தலின்போது எப்படி முட்டி போட்டு ஜெபம் செய்து, தி.மு.க. ஆட்சியைக் கொண்டு வந்தோமோ, அதேபோல 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது முட்டி போட்டு ஜெபம் செய்து, பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக் அனுப்ப வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

கிறிஸ்தவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக பொய்யான தகவலை இனிகோ இருதயராஜ் கூறியிருப்பதோடு, ஒரு மத போதகரைப் போல பேசியிருப்பது பெரும் விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது. ஆகவே, எந்த மதத்துக்கும் சார்பில்லாமல் இருப்பேன் என்று சத்தியப் பிரமாணம் எடுத்திருக்கும் மக்கள் பிரதிநிதியான இனிகோ இருதயராஜ், கிறிஸ்தவ மாநாட்டில் கலந்துகொண்டதோடு, ஒரு மத போதகரைப் போல பேசியிருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். ஆகவே, அவரை எம்.எல்.ஏ. பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தேசப் பற்றாளர்களும், சமூக ஆர்வலர்களும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு வலியுறுத்தி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, கடந்தாண்டு மதமாற்ற டார்ச்சரால் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் நினைவிருக்கலாம். அதாவது, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இருக்கும் மைக்கேல்பட்டியில் தூய இருதய மேல்நிலைப்பள்ளி அமைந்திருக்கிறது. இப்பள்ளியில் அரியலூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா, பிளஸ் 2 படித்து வந்தார். ஹாஸ்டலில் தங்கிப் படித்த இவரை, வார்டன் உள்ளிட்டோர் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் வார்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீனில் வந்தபோது, இதே இனிகோ இருதயராஜ்தான், சிறைக்கே சென்று அந்த வார்டனுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. தற்போது, மத போதகரைப் போல பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.


Share it if you like it