ஐயப்பன் சுவாமிக்காக விரதம் இருப்பது வெறும் சடங்கு அல்ல, தன்னுள் இறைவனை அறிந்து கொள்ளும் ஒரு உள்முகப் பயணம் !

ஐயப்பன் சுவாமிக்காக விரதம் இருப்பது வெறும் சடங்கு அல்ல, தன்னுள் இறைவனை அறிந்து கொள்ளும் ஒரு உள்முகப் பயணம் !

Share it if you like it

ஐயப்ப பக்தர்களுக்கு இன்று பொன்னான நாள். கார்த்திகை 1-ம் தேதி மாலை போட்டு 48 நாள்கள் விரதம் இருந்து மண்டல மற்றும் மகர பூஜைக்கு சபரிமலை செல்வது வழக்கம். கண்கண்ட தெய்வமாம், கலியுக வரதன் ஐயப்பனை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் பெருகியபடியே உள்ளனர். ஒருமுறை சென்று தரிசித்தவர் தனது ஆயுள் முழுக்க மீண்டும் மீண்டும் செல்ல விரும்பும் புனிதத் தலமாக சபரிமலை உள்ளது. அதன் காரணம் மிகவும் எளியது. காந்தமலை ஜோதியாம் சபரிமலை ஐயப்பன் யோக வடிவில் அமர்ந்து ஞான மழைப் பொழிவதே என்கிறார்கள் பெரியோர்கள்.

‘நீயே அதுவாக இருக்கிறாய்’ என்பதை வலியுறுத்தத்தான் மாலை அணிந்து கொள்ளும் ஒவ்வொரு பக்தர்களையும் நாம் ‘சாமி, கன்னி சாமி, மணிகண்ட சாமி’ என்றெல்லாம் ஐயப்பனின் அம்சமாகவே அழைத்துப் பெருமைப்படுத்துகிறோம். இது வேறு எந்த வழிபாட்டிலும் வேறு எந்த தெய்வத்திடமும் காணாத சிறப்பு கொண்டது. 48 நாள்கள் ஐயப்பனுக்காக விரதம் இருப்பது என்பது வெறும் சடங்கு அல்ல. தன்னுள் இறைவனை அறிந்து கொள்ளும் ஒரு உள்முகப் பயணம் என்பதை பக்தர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்காகவே விரத காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் உருவாக்கப் பட்டனர்.

வெறும் சடங்குகளால் இறைவனை உணரவே முடியாது என்பதை நமது தர்மம் உணர்ந்துள்ளது. சடங்குகளைப் பற்றிக்கொண்டு தனித்து இருக்கும் தவ நிலையில் ஞானத்தை அடையலாம் என்பது நியதி. ‘காடு, மலை, மேடு எல்லாம் தாண்டி கடினமான பாதைகளில் பயணித்து என்னை நாடி வரும் பக்தனே, உன்னுள்ளேயே நான் இருக்கிறேன். நீயாகவே நான் இருக்கிறேன்’ என்பதற்கு உணர்த்தியபடியே ஐயன் ஐயப்பன் இருக்கிறான் என்பதற்கு சாட்சியே ‘தத்வமஸி’. 48 நாள்கள் விரதமிருந்து சாமி என்ற நிலைக்கு உயர்ந்த பக்தனே, ஒவ்வொரு நாளும் சத்தியத்தையும் விரதத்தையும் நீ கடைப்பிடித்து வாழ்ந்தால் நீயே நானாக மாறிவிடுவாய்!’ என்பதுவே ஸ்ரீஐயப்பன் கூறும் அருள்நெறி. நீர் தெளிவாக இருந்தால் பிம்பம் அறியலாம். மனம் தெளிவாக இருந்தால் இறைவனையும் உணரலாம். எனவே பக்தர்களே ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்று விரும்புவதைப்போலவே அவனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்புங்கள்! அதுவே பக்தியின் உச்சம்.


Share it if you like it