உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்: நிதியமைச்சர் நிர்மலாவுக்கு இந்தியாவில் முதலிடம்!

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்: நிதியமைச்சர் நிர்மலாவுக்கு இந்தியாவில் முதலிடம்!

Share it if you like it

புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடர்ந்து 4-வது முறையாக இடம் பிடித்திருக்கிறார். இவர் சர்வதேச அளவில் 36-வது இடத்தையும், இந்திய அளவில் முதலிடத்தையும் பிடித்திருக்கிறார்.

அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கிவரும் பத்திரிகை போர்ப்ஸ். உலகின் மிகவும் புகழ்பெற்ற இந்த போர்ப்ஸ் பத்திரிகை, சர்வதேச அளவில் பெரும் செல்வந்தர்கள், மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்கள், அதிக புகழ்பெற்ற மனிதர்கள், அதிக சக்திவாய்ந்த நபர்கள், சிறந்த கொடையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆசியாவில் சிறந்த நன்கொடையாளர் பட்டியலை வெளியிட்டது. இப்பட்டியலில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ஹெச்.சி.எல். நிறுவனத்தின் துணை நிறுவனர் தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்பஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கிறது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. இதன் மூலம் போர்ப்ஸ் பட்டியலில் தொடர்ந்து 4-வது முறையாக நிர்மலா சீத்தாராமன் இடம் பிடித்திருக்கிறார். இப்பட்டியலில் நிர்மலா சீத்தாராமனையும் சேர்த்து மொத்தம் 6 இந்திய பெண்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். நிர்மலா சீத்தாராமன் இந்திய அளவில் முதலிடத்தையும், சர்வதேச அளவில் 36-வது இடத்தையும் பிடித்திருக்கிறார். ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் 53-வது இடத்தையும், செபி தலைவர் மாதபி புரி 54-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள்.

மேலும், இந்திய ஸ்டீல் ஆணையத்தின் தலைவர் சோமா மொண்டல் 67-வது இடத்திலும், பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார் ஷா 72-வது இடத்திலும், நைக்கா நிறுவனத்தின் தலைவர் பல்குனி சஞ்சய் நய்யார் 89-வது இடத்திலும் உள்ளனர். இப்பட்டியலில் ரோஷிணி, கிரண் மஜும்தார், பல்குனி ஆகிய 3 பேரும் தொடர்ந்து 2-வது முறையாக இடம் பிடித்திருக்கின்றனர். இப்பட்டியலில் முதல் இடத்தில் ஐரோப்பிய கமிஷனின் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன், 2-வது இடத்தில் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லக்ராட், 3-வது இடத்தில் அமெரிக்க துறை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் உள்ளனர்.


Share it if you like it