96 ஆங்கிலேயர்களை கொன்று வீழ்த்திய ஊமைத்துரை

96 ஆங்கிலேயர்களை கொன்று வீழ்த்திய ஊமைத்துரை

Share it if you like it

புரட்சி வீரன் ஊமைத்துரை

1801 ஆம் ஆண்டு …. நவம்பர் 16 ஆம் தேதி…

பாஞ்சாலங்குறிச்சி வீரச்சீமை… இடிந்து போன கோட்டைக் கொத்தளங்கள்… மணல் மேடாகக் காட்சியளிக்கும் மாளிகைகள்…!

27 வீரர்கள் வரிசையாக நிற்க, அவர்கள் உயிரைக் குடிக்க தயாராக தலைக்கு மேல் தூக்குக் கயிறுகள். ஆனால், உயிரை விடப் போகிறோம் என்ற பயம் கொஞ்சம் கூட, அந்த வீரர்களின் முகங்களில் காணப்பட வில்லை. வீரம் செறிந்த அந்தக் கண்களில், கோபம் மட்டும் கொப்பளித்துக் கொண்டு இருந்தது. ‘தாங்கள் யாருக்கும் அடிமையில்லை ‘ என்ற கர்வமும், அவர்களிடம் குறையவில்லை .

அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து, தென் தமிழகத்தில் பாளையக்காரர்களின் உரிமையை மீண்டும் நிலை நாட்ட, விடுதலை வேட்கைக்கு விதையாய், உரமாய் ஆன அந்த வீர வேங்கையின் பெயர் ஊமைத்துரை…!

https://youtu.be/PgfwU25D-TM

திருநெல்வேலிச் சீமையில், ஆங்கிலேய அதிகாரிகள் இந்தப் பெயரைக் கேட்டாலே, மிரளுவார்கள். சிறு வயதிலேயே போர்க்கலையில் வல்லவராகத் திகழ்ந்த ஊமைத்துரை, தனது சகோதரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குத் தோழராக, நண்பனாக, தளபதியாக விளங்கியவர். கப்பம் கேட்டு மிரட்டிய ஆற்காட்டு நவாபுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் அடிமையாகாமல் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க உறுதுணையாக இருந்தவர். ஊமைத்துரையின் ராஜதந்திரம், ஒற்றறியும் திறன், இவைகளே பாஞ்சாலங்குறிச்சியின், வெற்றியின் ரகசியமாக இருந்தது.

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி வீழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறில் 1799ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட பிறகு கைதான அவரது தம்பிகளான ஊமைத்துரையும், செவத்தையாவும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். சிங்கம் கூட்டுக்குள் அடைபட்டாலும் அதன் சிந்தனையும், செயலும் சிறைப்பட்டு விடுமா என்ன? பாஞ்சாலங்குறிச்சியை மீட்க ரகசிய திட்டம்  தீட்டினார், ஊமைத்துரை. அதன்படி கந்தசஷ்டி விழாவை பயன்படுத்தி வெளியே இருந்த நண்பர்களின் துணையுடன் தப்பினார், ஊமைத்துரை.

சிறையில் இருந்து தப்பி, தாயகம் திரும்பிய ஊமைத்துரையையும், நண்பர்களையும் பாஞ்சாலங்குறிச்சி கொண்டாடி மகிழ்ந்தது. வீழ்ந்த கோட்டையும் கொத்தளங்களும், மீண்டும் வானுயர எழும்பின. சதிவலை பின்னி, நயவஞ்சக நாடகமாடி, நாடு பிடித்து வரும் ஆங்கிலேய படையின் அசைவுகளை அளந்து வைத்திருந்தார், ஊமைத்துரை.

நெல்லைச் சீமையில், புரட்சியைத் தொடங்கினார். விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம் போன்ற பகுதிகள் அடுத்தடுத்து ஊமைத்துரையின் வசமாயின. பசுவந்தனையில் இருந்த ஆங்கிலப் படையின் முகாம் மீது சுதேச வீரர்கள், நள்ளிரவு நேரத்தில் கொரில்லா தாக்குதல் நடத்தினர். அந்த வீரப்போரில் ஆங்கில வீரர்கள், 96 பேர் விண்ணுலகம் அனுப்பப்பட்டனர். வெற்றி முழக்கமிட்டபடி ஊமைத்துரையின் சுதந்திரப் படை,  தூத்துக்குடி வரை முன்னேறியது.

“பசுவந்தனை” சம்பவத்தால் கடும் கோபம் கொண்ட பிரிட்டிஷ் இந்தியாவின் தென் பிராந்திய தளபதி கேப்டன் மெக்காலே, தரங்கம்பாடி, சென்னை, கல்கத்தா போன்ற பகுதிகளில் இருந்து கூடுதல் படைகளை வரவழைத்தார்.

ஊமைத்துரையின் தலைமையில் வீரர்கள் உக்கிரமாக போர் செய்தனர். தாயகத்து வீரர்கள் தீரமுடன் போரிட்ட போதிலும் ஆங்கிலப் பெரும்படையின் பீரங்கித் தாக்குதலுக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்ந்தது. நூற்றுக் கணக்கான வீரர்கள்  போர்க்களத்தில் உயிர் துறந்தனர். எஞ்சியவர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும் தளபதி ஊமைத்துரை, செவத்தையா மற்றும் நண்பர்கள் ஆங்கிலேயர்களின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு போர்க்களத்தில் இருந்து தப்பினர்.

ஊமைத்துரை தலைமையிலான மற்றொரு படை மதுரையில் தீரமுடன் போரிட்டது. மதுரையின் பழைய நாடு பகுதிகள் ஊமைத்துரையின் வசமாயின. அவரது வீரப்போரைக் கண்டு அஞ்சிய மதுரை கலெக்டர், உதவிக்கு வரும்படி கவர்னர் எட்வர்டுக்கு தகவல் அனுப்பினார். ஊமைத்துரையின் அதிரடி வெற்றிகளைக் கண்ட மதுரை கலெக்டர் தப்பியோடினார்.

ஊமைத்துரை வீரம் காட்டிய போதிலும், காலம் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாகவே இருந்தது. பல பகுதிகளிலும் புரட்சி அடக்கப்பட்டு விட்டதால் ஆங்கிலேயப் படை மொத்தமாக திண்டுக்கல்லில் குவிக்கப்பட்டது. நீண்ட போரால் ஏற்கனவே களைத்துப் போன புரட்சிப் படை, சத்திரப்பட்டியிலும், விருப்பாட்சியிலும் ஆங்கிலேயப் படையை எதிர்கொள்ள முடியாமல் துவண்டது. இறுதியாக புரட்சி ஒடுக்கப்பட்டது.

எனினும் கடைசி நேரத்திலும் ஊமைத்துரை அயரவில்லை . மீதமிருந்த ஒரு சில வீரர்களுடன், வத்தலகுண்டை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் சென்று பதுங்கிக் கொண்டனர், அங்கும் சுற்றி வளைத்தது,  ஆங்கிலப் படை, உதவி செய்ய ஆளில்லை . உடல் முழுவதும் ரணமாக, ஆயுதமின்றி, உண்ண உணவின்றி, ஏன் குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்தார், ஊமைத்துரை.

ஊமைத்துரையும் அவரது நண்பர்களும் ஆங்கிலப் படையால் கைது செய்யப்பட்டு திண்டுக்கல்லுக்கு அமைத்துச் செல்லப்பட்டனர். அங்கு கண்துடைப்பு விசாரணை நடைபெற்றது. புரட்சியை நடத்தினார். ஆங்கிலேய கம்பெனிக்கு எதிராகக் கலகம் செய்தார், கலவரம் நடத்தினார். ஆங்கிலேயர்களின் முகாம்களைத் தகர்த்தார். ஆயுதங்களைச் சூறையாடினார். பிரிட்டிஷ் வீரர்களைக் கொன்று குவித்தார். பாளையக்காரர்களைத் தூண்டிவிட்டு புரட்சிக்குத் தலைமையேற்றார். இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் ஊமைத்துரை மீது சுமத்தப்பட்டன.

குற்றச்சாட்டுகளை கண்டு அசரவில்லை, ஊமைத்துரை, ஆங்கில ஆதிக்கத்தை அசைத்துப் பார்க்கத் துணிந்ததற்காக ஊமைத்துரை உள்ளிட்டோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பைக் கேட்டு கவலைப்படாத ஊமைத்துரை, தனது சார்பில் ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே முன்வைத்தார்.

தான் பிறந்து வளர்ந்த, தன்னை சீராட்டி, பாராட்டி, வீரம் ஊட்டி வளர்த்த பாஞ்சாலங்குறிச்சி வீரச் சீமையிலேயே தனது உயிர் பிரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அவரது விருப்பப்படி அனைவரும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 1801 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சி வீரச்சீமையில், ஊரே கூடி ஆட்டு மந்தைகளாய் சுற்றி நிற்க, கும்பினிகளை விரட்ட மேற்கொண்ட சபதம் நிறைவேறாமல், தூக்குமேடை ஏறினார், ஊமைத்துரை.

வீழ்ந்த கோட்டையையும், நொறுங்கிய மனதுடன் திரண்டு நின்ற உறவினர்களையும், நண்பர்களையும் ஒருமுறை பார்த்தார். தூக்குக்கயிற்றை முத்தமிட்டு கழுத்தில் மாட்டிக் கொண்டார் ஊமைத்துரை. கும்பினிகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த அந்த, பாஞ்சாலங்குறிச்சி வீரத்தளபதியின் கடைசி மூச்சு பிரிந்தது.

  • நெல்லை ஜனா

Share it if you like it