இந்தியா தலைமையில் ஜி20

இந்தியா தலைமையில் ஜி20

Share it if you like it

இந்தியா தலைமையில் ஜி20

ஜி 20 என்பது உலகின் முக்கிய வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்களான 20 நாடுகள் உறுப்பினர்களாக கொண்ட ஒரு மன்றமாகும். இந்த ஜி 20 குழுவில் இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் நாடுகள் உள்ளன.


ஜி 20யின் உறுப்பு நாடுகள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 75 சதவீதத்திற்கும் மேலாகவும், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.


இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜி20 மன்றத்தின் தலைமை பதவி தற்போது இந்தியா வசம் வந்துள்ளது. அதன்படி டிசம்பர் 1ம் தேதி 2022 முதல் நவம்பர் 30, 2023 வரை ஒரு வருட காலத்திற்கு இந்தியா இந்த குழுவிற்கு தலைமை வகிக்கும்.


நவம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் இந்தோனேசியாவின் பாலியில் நடந்த முந்தைய ஜி 20 உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் செல்வாக்குமிக்க அதன் தலைமைப் பதவி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.


மேலும் இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கான சின்னம் மற்றும் தீம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் வெளியிட்டார். இந்தியாவின் ஜி20 சின்னம் தாமரை மலர் மேல் பூமி இருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் ஜி 20க்கான தீம் – “ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்” என்பதாகும். இது உலகம் ஒரு குடும்பம் என்று கூறும் ‘வசுதைவ குடும்பகம்’ மீதான இந்தியாவின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.


முதல்கட்டமாக டிசம்பர் 1ம் தேதியான இன்று 19 நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தியா அதிகாரப்பூர்வமாக தன் தலைமை பதவியை ஏற்கிறது.
தொடர்ந்து இந்தியாவின் 50 நகரங்களில் 200 ஜி20 கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜி-20 தலைவர்களின் உச்சி மாநாட்டை இந்தியா தனது தலைமையின் கீழ் நடத்தும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாடுகளில் இந்தியாவில் உள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 100 நினைவுச்சின்னங்களை முன்னிலைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள இந்த 100 நினைவுச்சின்னங்கள் ஒரு வாரத்திற்கு ஜி20 சின்னத்தை சிறப்பிக்கும் வகையில் ஒளிரும்.


மேலும் இந்தியாவில் நடைபெறும் சிறந்த திருவிழாக்கள், கொண்டாட்டங்களை ஜி20 உறுப்பினர்களிடையே பிரபலப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 2023ம் ஆண்டு ஜனவரியில் வரும் மகர சங்கராந்தி மற்றும் பிப்ரவரியில் வரும் சிவராத்திரி போன்ற பல்வேறு திருவிழாக்களைக் காண்பிக்கும் திட்டங்களும் உள்ளன.
முக்கியமாக வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் பிரபல ஹார்ன்பில் திருவிழா டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கள்ளதால், ஜி20 தலைமை பதவி ஏற்கும் விழாவில் இன்று இந்த திருவிழா காட்சிப்படுத்தப்படும்.


கடந்த மாதம் நடந்த ஜி20 நிறைவு விழாவின் போது பேசிய மோடி, இந்தியாவின் ஒரு வருடகால ஜி 20 தலைவர் பதவியானது உள்ளடக்கமான, லட்சியமான, தீர்க்கமான மற்றும் செயல் சார்ந்ததாக” இருக்கும். பேரழிவு ஆயுதங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பது மற்றும் உலகளாவிய பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த நேர்மையான உரையாடலை இது ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.


தற்போது ஜி 20 குழுவின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ள நிலையில், ஒட்டுமொத்த மனித குலத்திற்கு நன்மை பயக்கும் வகையில் அடிப்படை மனநிலையை மாற்ற வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.


இந்த ஒரு வருட தலைமை பதவியில் உலகளவிலான பொருளாதார மந்தநிலை மற்றும் காலநிலை நெருக்கடி போன்ற உலகளாவிய சவால்களை சமாளிப்பது, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜி 20 நாடுகளுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது குறித்து பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, வளர்ந்து வரும் பொருளாதாரமான இந்தியா, நடுத்தர வருமானம் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளைப் பற்றிய ஆழமான பொருளாதார புரிதலைக் கொண்டுள்ளது. இந்தியா, அதன் தனித்துவமான கண்ணோட்டத்துடன், இந்த நாடுகளின் நிதி பின்னடைவை மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கை அடைய உதவ முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

  • நிரஞ்சனா

Share it if you like it