சீனாவுடன் தொடர்பு: 138 சூதாட்ட செயலிகள் தடை!

சீனாவுடன் தொடர்பு: 138 சூதாட்ட செயலிகள் தடை!

Share it if you like it

சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது.

இந்தியாவில் சமீபகாலமாகவே, ஆன்லைன் சூதாட்டம் பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக, இந்த ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஏராளமான இளைஞர்கள் அடிமையாகிக் கிடக்கிறார்கள். இதனால், இளைஞர்கள் தங்களது பணத்தை பறிகொடுப்போது, தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாக இருக்கிறது. ஆகவே, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அவசர சட்டம் இயற்றப்பட்டு கவர்னருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழக அரசு இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை.

அதேபோல, கடன் செயலிகள் மூலமும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடன் செயலிகள் மூலம் குறிப்பிட்ட தொகையை கடனாக பெறுபவர்களிடம், வட்டி என்கிற பெயரில் பல்வேறு நிபந்தனைகளை திணித்து, மிகப்பெரிய தொகையை கட்டுமாறு வலியுறுத்துகின்றனர். அவ்வாறு தவணையை கட்ட மறுக்கும் வாடிக்கையாளர்கள் பற்றிய அந்தரங்க தகவல்களை திரட்டி, மிரட்டி பணம் வசூலித்து வருகின்றனர். எனவே, சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இதுபோன்ற செயலிகளுக்கு சீனாவுடன் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.


Share it if you like it