சிவகங்கை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பேக்கரி உரிமையாளரை மிரட்டி 50 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் உட்பட 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் கல்லலில் பேக்கரி கடை நடத்தி வந்தவர் நாச்சியப்பன். இவர், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேவகோட்டை மகளிர் போலீஸில் புகார் செய்யப்பட்டிருந்தது. இப்புகாரின் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் குணாளன், தேவகோட்டையைச் சேர்ந்த பாலாஜி உள்ளிட்டோர் நாச்சியப்பனிடம் பேரம் பேசி, 50 லட்சம் ரூபாய் வரை வாங்கி இருக்கிறார்கள். ஆனால், இதையும் மீறி நாச்சியப்பன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், மனமுடைந்த அவர் கடந்த 2022 ஜனவரி 25-ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், சிறுமிக்கு நேர்ந்த பாலியல் தொல்லை தொடர்பான புகாரை போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை. ஆகவே, இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, சிறுமியின் தாயார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதேபோல, தற்கொலை செய்து கொண்ட நாச்சியப்பன் மனைவி சகுந்தலாதேவியும், தனது கணவரிடம் இருந்து பணத்தை பறித்து, தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, 2 மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. மதுரை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சுரேஷ் பீட்டர் பெலிக்ஸ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தியதில் சகுந்தலாதேவி புகாரில் கூறியபடி, நாச்சியப்பனை மிரட்டி பணம் பெற்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மிரட்டி பணம் பறித்த வழக்கில் கல்லல் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் குணாளன், தேவகோட்டையைச் சேர்ந்த பாலாஜி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்தனர்.