உலகின் குருவாக இந்தியா மாறும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், முதல் நாளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இதையடுத்து, இரண்டாவது நாளாக நேற்று காலை ராமநாதபுரம் அருகே எட்டிவயல் கிராமத்திற்கு சென்றார். அப்போது, விவசாயிகள் கொடுத்த அன்பான வரவேற்பை அவர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, அவர்களுடன் உரையாற்றும் போது இவ்வாறு கூறினார் ;
உலகில் இந்தியா வளர்ந்த நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், தங்களது வளர்ச்சியை யுத்தத்துக்குப் பயன்படுத்தின. ஆனால், இந்தியா உலகுக்கு உதவும் நாடாக மாறிக் கொண்டிருக்கிறது.
உலக நாடுகளில் கரோனாவுக்கு இந்தியா கண்டுபிடித்த மருந்து உயர்வானது. அந்த மருந்தை, ஏழை நாடுகளுக்கு இலவசமாக வழங்கி தொண்டு செய்தோம். அதனால், உலகத்தின் குருவாக இந்தியா உருவாக வெகுகாலம் இல்லை. 2047-ல் உலகில் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இயற்கை விவசாயத்தில் ஆர்கானிக் விவசாயம், இயற்கை விவசாயம் என இரு வகைகள் உண்டு. ஆர்கானிக் விவசாயம் உரம், பூச்சி மருந்தின்றி இயற்கை உரங்களைக் கொண்டு செய்வது. இயற்கை விவசாயம் என்பது சூழலுக்கு ஏற்ப அங்குள்ள பயிர்களை உருவாக்கி விவசாயம் செய்வது. இந்த விவசாய முறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும். குறைந்த நீரில் உற்பத்தியாகும் சிறு தானியப் பயிர்களை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும். சிறு தானியங்களில் அதிகச் சத்து உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.