மத்திய பட்ஜெட்: தாலிபான்கள் வரவேற்பு!

மத்திய பட்ஜெட்: தாலிபான்கள் வரவேற்பு!

Share it if you like it

ஆப்கானிஸ்தானுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கும் மத்திய பட்ஜெட்டை தாலிபான்கள் வரவேற்றிருக்கிறார்கள். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை தாலிபான்கள் ஆட்சி நடந்தது. இந்த சமயத்தில் அல் கொய்தா அமைப்பினர், அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை விமானத்தை மோதி தகர்த்தனர். இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்கு காரணமான அவ்வமைப்பின் தலைவன் ஒசாமா பின் லேடன், ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்தான். அவனை ஒப்படைக்குமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டது. ஆனால், தாலிபான்கள் மறுத்துவிட்டனர். இதனால், ஆப்கானிஸ்தானை விட்டு தாலிபான்களை விரட்டியடித்த அமெரிக்கா, ஒசாமா பின்லேடனையும் சுட்டுக்கொன்றது. இதன் பிறகு, சுமார் 20 ஆண்டுகள் கழித்து கடந்த 2021-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார்கள் தாலிபான்கள்.

அப்போது, உலகம் முழுவதும் உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ், ஆப்கானிஸ்தானையும் ஆட்டிப் படைத்தது. இதையடுத்து, மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவ உதவிகளை இந்தியா வழங்கியது. அதேபோல, ஊட்டச் சத்துக் குறைபாட்டால் தவித்து வரும் ஆப்கானிஸ்தான் குழந்தைகளுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமையையும் இந்தியா வழங்கியது. மேற்கண்ட உதவிகளுக்கு தாலிபான்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், கடந்தாண்டு பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கியது. இந்த சூழலில்தான், நிகழாண்டு மத்திய பட்ஜெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு 200 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

அதாவது, 2023 – 24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வெளியுறவு அமைச்சகத்துக்கு மொத்தம் 18,050 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட 17,250 கோடி ரூபாயைவிட சுமார் 4.64 சதவிகிதம் அதிகம். இந்த நிதியிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சி நிதி தொகுப்பாக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்களான தாலிபான்கள் வரவேற்றிருக்கிறார்கள். இந்தியாவின் பட்ஜெட்டை வரவேற்று, தலிபான் அமைப்பின் முன்னாள் பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர் சுஹைல் ஷஹீன் பேசுகையில், “ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு இந்தியாவின் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளையும் நம்பிக்கையையும் மேம்படுத்த உதவும்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it