பி.எஃப்.ஐ. அமைப்புக்கு 5 ஆண்டு தடை!

பி.எஃப்.ஐ. அமைப்புக்கு 5 ஆண்டு தடை!

Share it if you like it

இந்தியாவில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா உட்பட 9 இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு 5 ஆண்டு தடை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பு 2006-ம் ஆண்டு கேரளாவில் தொடங்கப்பட்டது. டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்தது. இந்த அமைப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. உதாரணமாக, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், முஸ்லீம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத பயிற்சி அளித்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துவது, அல்கொய்தா, அல் உம்மா, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. மேலும், நாடு முழுவதும் ஹிந்து பண்டிகை ஊர்வலங்களின்போது கல்வீசியும், வன்முறையிலும் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டன. ஆகவே, இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, கடந்த சில மாதங்களாகவே பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.). அவ்வப்போது சோதனைகளை நடத்தி சிலரை கைது செய்து வந்த என்.ஐ.ஏ., கடந்த 21-ம் தேதி அதிரடியாக மாஸ் ரெய்டை நடத்தியது. நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 93 இடங்களில் நடந்து இந்த ரெய்டின்போது, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, மாநில சிறப்பு போலீஸ் படை ஆகியவற்றையும் இணைத்துக் கொண்டது என்.ஐ.ஏ. அமைப்பு. பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடந்த இந்த மாஸ் ரெய்டில் முக்கிய ஆவணங்கள், ஆயுதங்கள், வாக்கி டாக்கி, வயர்லெஸ் போன், 120 ஹவாலா பணப் பரிமாற்றத்துக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, 110 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று 9 மாநிலங்களில் மீண்டும் சோதனையில் ஈடுபட்ட என்.ஐ.ஏ., பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்தது. இவர்களிடமிருந்து ஏராளமான முக்கிய ஆவணங்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. பின்னர், பி.எஃப்.ஐ. சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசிடம் ஒப்படைத்தனர் என்.ஐ.ஏ. அதிகாரிகள். இதன் தொடர்ச்சியாக, பி.எஃப்.ஐ. மற்றும் அதனுடன் தொடர்புடைய 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது மத்திய அரசு. பி.எஃப்.ஐ. அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சூஃபி முஸ்லீம் அமைப்பு உட்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளே வரவேற்புத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it