இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடரும்: ஐ.எம்.எஃப்.!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடரும்: ஐ.எம்.எஃப்.!

Share it if you like it

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடரும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, அன்றையதினம் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அந்த ஆய்வறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2023 – 24 இல் 6.5% என்று கணிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2021 – 22-ம் ஆண்டு இது 8.7% ஆகவும், நடப்பு நிதியாண்டில் 7% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், உலகிலேயே வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில், இந்தியா 3-வது பெரிய பொருளாதாரமாகவும், எக்ஸ்சேஞ்ச் ரேட் அடிப்படையில் இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாகவும் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்தும் இந்தியா மீண்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அந்த இழப்பை கிட்டத்தட்ட மீட்டுவிட்டதாகவும், பெருந்தொற்று மற்றும் உக்ரைன் விவகாரம் காரணமாக இழந்த பொருளாதாரம் மீட்கப்பட்டு விட்டதாகவும், நிறுத்தப்பட்ட வளர்ச்சி மீண்டும் தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. தவிர, பல உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் பொருளாதாரம் மிகச் சிறப்பாக மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 2022-ல் இந்திய நாட்டின் பொருளாதாரம் என்பது கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்து விட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல, சர்வதேச நாணய நிதியமும் (IMF) உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடரும் என்று கூறியிருக்கிறது.

அதாவது, உலக பொருளாதாரக் கண்ணோட்டத்தில் IMF தனது ஜனவரி மாத புதுப்பிப்பை கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில், இந்தியா 2023-ல் 6.1 சதவீதமாக வளர்ச்சியடையும். இந்த வளர்ச்சி 2024-ல் 6.8 சதவீதமாக இருக்கும் என்று கூறியிருக்கிறது. மேலும், வளர்ந்து வரும் மற்றும் வளரும் ஆசியாவின் வளர்ச்சி 2023-ல் 5.3 சதவீதமாகவும், 2024-ல் 5.2 சதவீதமாகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் IMF சுட்டிக்காட்டி இருக்கிறது. அதேசமயம், மந்தநிலை அச்சம் இருந்தபோதிலும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அல்லது தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எதிர்மறையான வளர்ச்சி எதிர்பார்க்கப்படவில்லை என்றும் IMF கூறியிருக்கிறது. 2023-ம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சி 5.2 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டிருப்பதாகவும் IMF கூறியிருக்கிறது.


Share it if you like it