70 லட்சம் இந்தியர்களை மீட்டிருக்கிறோம்: வெளியுறவுத்துறை அமைச்சர் பெருமிதம்!

70 லட்சம் இந்தியர்களை மீட்டிருக்கிறோம்: வெளியுறவுத்துறை அமைச்சர் பெருமிதம்!

Share it if you like it

கொரோனா காலகட்டத்தில் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 70 லட்சம் இந்தியர்களை மீட்டிருக்கிறோம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமையுடன் கூறியிருக்கிறார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சவூதி அரேபியா நாட்டில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதற்காக நேற்று புறப்பட்டுச் சென்றவர், அந்நாட்டின் தலைநகர் ரியாத்தில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “கொரோனா காலகட்டத்தின்போது, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்பதற்காக நாங்கள் வந்தே பாரத் என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இத்திட்டத்தின்படி ஏர் இந்தியா விமானத்தை அனுப்பி உலகம் முழுவதிலும் இருந்து 70 மில்லியன் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வந்தோம். இதை வேறு எந்த நாடுகளும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் இந்த உலகமே இன்று இந்தியாவை உற்றுப் பார்க்கிறது” என்றார்.

மேலும், அரபு தேசத்துடன் வளர்ந்து வரும் நட்பை எடுத்துரைத்த ஜெய்சங்கர், ஆக்ஸிஜன் சப்ளைகள் மூலம் கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதில் சவுதி அரேபியாவின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கும், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும் இந்தியா எடுத்த முயற்சிகள் குறித்தும் அமைச்சர் பேசினார். இதுகுறித்து பேசிய ஜெய்சங்கர், “வளர்ந்த நாடுகள்கூட கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்த முடியவில்லை. ஆனால், தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத முயற்சிகளால் இந்தியா அந்த சாதனையை செய்தது. சவுதி அரேபியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய சமூகத்தின் பங்கு அளப்பரியது. சவுதி அரேபியாவில் 2.50 மில்லியன் இந்தியர்கள் வசிக்கிறீர்கள். இயற்கையாகவே உங்களுக்கு உங்கள் கவலைகள், உங்கள் நலன்கள், உங்கள் பிரச்னைகள் இருக்கும். அதை அறிந்துகொள்வது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை தெரிந்து கொண்டால்தான் நான் அதிகாரிகளுடன் விவாதிக்கும்போது எளிதாக இருக்கும்” என்றார்.


Share it if you like it