நாடு வளர்கிறது என்றால் நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறார்கள்: நிர்மலா ஆவேசம்!

நாடு வளர்கிறது என்றால் நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறார்கள்: நிர்மலா ஆவேசம்!

Share it if you like it

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு எம்.பி.க்கள் சிலர் பொறாமைப்படுகிறார்கள். நாடு வளர்கிறது என்று சொன்னால் சில எம்.பி.க்கள் நகைச்சுவையாக எடுத்து கொள்கிறார்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

தற்போது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த சூழலில், மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, தெலங்கானா மாநில காங்கிரஸ் எம்.பி. அனுமூலா ரேவந்த் ரெட்டி, “2013-ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, ‘இந்திய ரூபாய் மதிப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. தமிழ் மக்கள் ஏன் இவரை டெல்லிக்கு அனுப்பினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை’ என்று ப.சிதம்பரத்தை மறைமுகமாகத் தாக்கினார். இப்போது இந்திய ரூபாய் ஐ.சி.யு.வில் இருக்கிறது. இது திரும்ப அரசு ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “உலகப் பொருளாதாரமே அவசர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறது. அதேசமயம், உக்ரைன் – ரஷ்யா போர், கொரோனா போன்றவற்றை தாக்குப்பிடித்து இந்திய பொருளாதாரம் உறுதியாக நிற்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு வேறு எந்த நாணயத்தைவிடவும் எப்போதும்போல் மிகவும் வலுவாகவே இருக்கிறது. டாலர் ரூபாய் மதிப்பு ஊசலாட்டத்தை தவிர்க்க ரிசர்வ் வங்கி அன்னிய செலாவணி இருப்பை பயன்படுத்தி தீர்வு காண முற்பட்டிருக்கிறது. இந்திய பொருளாதார வளர்ச்சியைக் கண்டு சிலருக்கு பொறாமை. இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக இருப்பதில் எதிர்க்கட்சிக்கு ஏதோ பிரச்னைபோல.

இந்தியா வளர்கிறது என்று சொன்னால் அதைக் கேட்டு பெருமிதம் கொள்வதை விட்டுவிட்டு, உறுப்பினர்கள் சிலர் நகைச்சுவையாக எடுத்து கொள்கிறார்கள்” என்று சாடினார் நிர்மலா. மேலும், ரூபாயின் மதிப்பு சரியவில்லை. அமெரிக்க டாலர் மதிப்பு மட்டுமே உயர்ந்து வருகிறது என்று மீண்டும் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், இந்த பதிலைக் கேட்டு பலர் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் வெளியிடுவார்கள். எனினும், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்றார். திருப்பூர் எம்.பி. சுப்பராயன் பேசுகையில், பெருநிறுவனங்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் வாராக் கடன்கள் மட்டும் வங்கிகளால் ரத்து செய்யப்படுவதாக குற்றம்சாட்டியவர், பெருநிறுவனங்களுக்கு கடனில் சலுகை காட்டும் மத்திய அரசு கல்விக் கடன்களையும் ரத்து செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, பெருநிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகை ஏதும் காட்டவில்லை என்றார் நிதியமைச்சர்.


Share it if you like it