விடுதலைப் போராட்ட வீரர் – சுப்ரமணிய சிவா

விடுதலைப் போராட்ட வீரர் – சுப்ரமணிய சிவா

Share it if you like it

ஆங்கிலேயரோடு ஆங்கிலத்தையும் அகற்ற வேண்டும் என்றும் பாரத அன்னைக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்றும் விரும்பிய தேசபக்தர் (1884-1925)

சுப்ரமணிய சிவா ஒரு விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமின்றி பெயர் பெற்ற எழுத்தாளரும் ஆவார். 1908 ஆம் ஆண்டிலிருந்து 1922 ஆம் ஆண்டு வரைக்கும் இருந்த காலகட்டத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களுக்காக கணக்கில் அடங்க முறைகள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

‘தர்ம பரிபாலன சமாஜம்’ என்ற பெயரால் ஒரு சங்கத்தை ஆரம்பித்தார். இதன் கூட்டங்கள் தனது வீட்டிலேயே நடைபெற ஏற்பாடு செய்தார். தேசிய உணர்வை வளர்த்தெடுக்கும் வகையில் பத்திரிகைகள் வரவழைத்து, இளம் தலைமுறையினர் படிக்க வழி செய்தார்.

தனது சமாஜ வேலைகளைத் தவிர தாமே வெளியிடங்களில் பொதுக் கூட்டங்கள் கூட்டிப் பேசினார். நாட்டின் அவல நிலைமையை மக்களுக்கு எடுத்துக் கூறி பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக மக்களைத் தட்டி எழுப்பினார். 1908 ஆம் ஆண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்த அவருடைய வாழ்க்கை சிறைவாசத்தால் வாழ்வின் பெரும் பகுதி சிறைச்சாலையிலேயே கழிந்தது.

தனது உடல் முழுவதும் தொழுநோயால் ஏற்பட்ட புண்களால் அவதிப்பட்டாலும் அவர் மாநிலம் முழுவதும் கால்நடையாகவே சுற்றினார். போகுமிடம் தோறும் பொது மக்களை திரட்டி எழுச்சி உரை ஆற்றினார். ஆங்கிலேய அரசாங்கத்தின் கோபத்திற்கு ஆளாக விருப்பமில்லாத பல பொதுமக்கள் அவருக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை.‌

ஒருபுறம் நோய், மறுபுறம் தனது ஏழ்மை காரணமாகவும் அவர் பசியோடும் பட்டினியோடும் பல நாட்களை கழித்தார். பல பெரிய நகரங்களில் கூட அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சியை சார்ந்த நபர்கள் கூட இவருடைய நோயை கண்டு முகம் சுளித்து இவரை வெறுத்து ஒதுக்கினர். இத்தகைய நேரங்களில் படுப்பதற்கு கூட இடமில்லாமல் வயல்வெளிகளில் வரப்புகளில் தலைவைத்து உறங்கிய காலங்களும் உண்டு.

தொழுநோய் மற்றும் வறுமையில் இருந்த போதும் மனம் தளராமல் சிவா தன்னுடைய சுற்றுப்பயணத்தை செய்து கொண்டே இருந்தார். இவருடைய விடாப்பிடியான போக்கினால் அடிக்கடி சிறைச்சாலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

மாறில் கர்சான் வங்கத்தை மதரீதியில் இரண்டாகப் பிளந்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்பு கிளம்பியது .‌சுதேச உணர்வு மேலோங்கியது .எங்கும் வந்தே மாதரம் என்னும் சுதந்திர கோஷம் எழுந்தது. அப்போது தூத்துக்குடியில் வக்கீல் ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசி கப்பல் கம்பெனி தொடங்கினார். சிதம்பரம் என்னும் காந்தம் சிவா எனும் இரும்பை தன்வசம் இழுத்துக் கொண்டது. இவர்களின் சுதேச உணர்வை தன் சுதேச கீதங்களால் பாரதியார் தூண்டிவிட்டார்.‌

தெற்கில் மூவரின் மேடைப்பேச்சு, சென்னையில் பாலரின் சொற்பொழிவு இவை சேர்ந்து சுதந்திர நாதம் எங்கும் எதிரொலிக்க தொடங்கியது. 1907-இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு காங்கிரசில் திலகரின் கை ஓங்கியது.

அப்போது தூத்துக்குடியில் சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரம் கேட்டு முழங்கினார்.அதோடு தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தம் வெற்றி பெறவும் பாடுபட்டார். தொழிலாளர் பிரச்சினையிலும் இவர் கவனம் சென்றது.

வ உ சிதம்பரம் பிள்ளை மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதி ஆகியோரோடு இணைந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சிவா ஒரு தீப்பொறி பறக்கும் புரட்சிகரமான பேச்சாளராக விளங்கினார். சம்ஸ்கிருத மொழியில் நாட்டம் கொண்டவராகவும் அதில் நடைமுறை அறிவு பெற்றவராகவும் விளங்கினார். ஞானபானு இதழை நடத்திய அவர் அதில் வ.உ.சி மற்றும் பாரதி ஆகியோரை எழுத வைத்தார். மீண்டும் தொழுநோயோடு இரண்டு முறை சிறை தண்டனை பெற்றாலும் அவர் விடுதலைப் போரில் தன்னாலான பங்களிப்பை தந்து கொண்டே இருந்தார்.

உடல் முழுவதும் புன்னாக இருந்த போதிலும் உடலை துணியால் மூடிக்கொண்டு சென்னை மாகாணம் முழுவதும் நடைபயணமாகவும் கட்டை வண்டியிலும் சென்று மேடைதோறும் முழங்கி வந்தார். 1915இல் மனைவியின் மறைவுக்குப் பின்னர் சற்றும் சளைக்காமல் முன்பை விட அதிக எண்ணிக்கையிலான கூட்டங்களில் பங்கேற்று சுதந்திரத் தீயை வளர்த்தார்.

முதலில் காரைக்குடியில் பாரத ஆசிரமம் தொடங்கியவர் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் 1921- 22 ஆம் ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை மாகாணத்தில் அரசியல் ரீதியாக சிறையில் அடைக்கப்பட்ட முதல் கைதி ஆனார்.

தனது நண்பர் சின்னமுத்து முதலியார் மற்றும் நண்பர்கள் உதவியுடன் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் ஆறு ஏக்கர் நிலம் வாங்கி ஆசிரமம் நிறுவினார். அதற்கு ‘பாரதபுரம்’ என பெயர் சூட்டினார். சர்வ மதத்தினரும் வழிபடும் வகையில் அங்கு பாரதமாதா கோயில் கட்ட முடிவு செய்தார்.

‘தேசபந்து’ சித்தரஞ்சன்தாஸை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினார். சிவாவும் ஆசிரம உறுப்பினர்களும் காலையில் எழுந்து மகாகவி பாரதியாரின் பாடல்களை பாடிக்கொண்டே, தெருத்தெருவாகச் சென்று அரிசியும் காசுகளும் பெற்று வாழ்க்கையை நடத்தினர். மற்ற நேரங்களில் தேசத் தொண்டு பணியே செய்து வந்தனர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வந்தனர்.

பாரத புரத்தில் பாரதமாதாவுக்கு கோவில் கட்ட முடிவு செய்த அவர் தமிழகம் முழுவதும் பயணம் செய்து ஆலயத்தை கட்டுவதற்கு தேவையான தொழுகையை திரட்ட முயன்ற போது தொழுநோய் இருப்பதை காரணம் காட்டி பஸ் ரயிலில் செல்லக்கூடாது என ஆங்கிலேய அரசு தடை விதித்தது.
இருப்பினும் கால்நடையாகவும் கட்டை வண்டியிலும் ஊர் ஊராகப் பயணம் செய்து சொற்பொழிவாற்றி பாரதமாதா கோயில் கட்ட நிதி திரட்டினார். 22.7.1925 இல் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பாரத ஆசிரமத்திற்கு வந்த அவர் தனது நண்பர்களுடன் மிக உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அடுத்த நாள் இயற்கை எய்தினார். கடைசி வரை பாரத அன்னைக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்கிற அவருடைய ஆவல் அவரது வாழ்நாளில் நிறைவேறாமலேயே போனது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்திலும் அவர் தனது தாய் மொழியாம் தமிழ் மொழியை மறந்துவிடாமல் அதனுடைய வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டார். அனைவரும் தாய்மொழி பற்று கொண்டவராக விளங்க வேண்டும் என்று விரும்பினார்.

அவரைப் பொறுத்தவரை ஒரு நாட்டினுடைய ஜீவனானது அதன் மொழியில்தான் வாழ்கிறது என்று நம்பினார். யார் ஒருவர் தாய் மொழியை கைவிடுகிறார்களோ அவர்கள் தற்கொலை செய்து கொள்வதை போன்ற முட்டாள்தனத்தை செய்கிறார்கள் என்று கருதினார். ஆகவே தாய்நாட்டுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள் முதலில் அவர்களுடைய தாய் மொழியை விரும்ப வேண்டும் என்று அவர் விரும்பினார்.

தாய் மொழியை கைவிட்டவர்கள் குற்றவாளிகளை போல் இறைவனுடைய சாம்ராஜ்யத்தில் எந்த விதமான மதிப்பும் மரியாதையையும் அற்றவர்கள் என்று சாடினார்.அவரை பொருத்தமட்டில் ஆங்கிலேய அரசாங்கமும் ஆங்கிலேய மொழி பற்றும் ஒரே மாதிரியான அடிமைத்தனத்தை ஏற்படுத்துகிறது என்று கருதினார்.

சுப்ரமணிய சிவா பணம் படைத்தவர் அல்ல; நல்ல மனம் படைத்தவர்.சாதி மத பேதம் வெறுத்து, பாரத நாட்டு மக்கள் அனைவரும் பாரத ஜாதியினர் என்றும் பாரதமாதாவே வழிபடும் தெய்வம் என்றும் கருதினார். அதையே மக்களிடமும் போதித்தார்.

சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சிந்தனையாளர் என பன்முகத் திறமை கொண்ட சுப்ரமணிய சிவா போன்ற எண்ணற்ற பேரறிவாளர்களின் தியாகத்தால் கிடைத்த சுதந்திர நாட்டில் வாழும் நாம் அவர்களின் தியாக வாழ்வை போற்றி வணங்குவோம்.

திரு. கார்த்திக்


Share it if you like it