“ஜெய்ஹிந்த்” செண்பகராமன் பிள்ளை

“ஜெய்ஹிந்த்” செண்பகராமன் பிள்ளை

Share it if you like it

திருவனந்தபுரத்து தெருக்களில் திரிந்து கொண்டிருந்த அழுக்குச்சட்டைகளும் தொப்பியும் அணிந்து பார்ப்பதற்கு மனநலம் குன்றியவர் போல் தோன்றிய வால்டர் ஸ்ட்ரிட்லேண்ட் ஒரு சமயம் குளிரில் நடுங்கி கொண்டு ஒரு திண்ணையில் படுத்து இருந்தார் .‌‌அவர்களைக் கண்ட 16 வயது இளைஞன் செண்பகராமன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் தாய் மூலம் மூலிகை கஷாயம் செய்வித்து மற்றும் கஞ்சியோடு பருகச் செய்து அவருக்கு இருந்த ஜுரத்தை போக்கினான்.

இதனால் பெரிதும் நெகிழ்ச்சியுற்ற அந்த ஜெர்மானியர் தன் உள் சட்டைப் பையில் இருந்து தங்கக் காசுகளை கத்தரித்து எடுத்துக் கொடுத்தார்.‌ உபகாரத்திற்கு பணம் வாங்குவது அதர்மம் என்று கூறி அதனை மறுத்தனர் செண்பகராமனும் அவர்தம் தாயும். இப்படிப்பட்ட சீலம் மிக்க குடும்பப் பின்னணியில் உதித்த பாரதப் புதல்வன். அவருடைய இளவயதில் நடந்த இன்னொரு சம்பவம் இதோ.

வால்டர்‌ ஸ்ட்ரிக்லாண்ட், தாவரவியல் விஞ்ஞானி தன் வீட்டிற்கு வருகை தந்திருக்கும் இளைஞர்களான செண்பகராமன் பிள்ளையையும் பத்மநாப பிள்ளையையும் முகமன் கூறி வரவேற்று தேனீர் பருக வழங்கினார். அப்பொழுது அவருடைய வீட்டின் கூரையின் உட்பக்கத்தில் ஒரு பெரிய சிலந்தி வலையில் ஈ ஒன்று சிக்கி சிலந்தியால் விழுங்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதை பார்த்த ஸ்ட்ரிக்லாண்ட் மாணவர்களே! இதைப் பற்றி கட்டுரை எழுதச் சொன்னால் எப்படி எழுதுவீர்கள் என்று கேட்டாராம். கொஞ்சமும் தாமதம் இன்றி , இளைஞன் செண்பகராமன் அளித்த பதில் இதுதான்.

ஐயா எங்கள் பாரத தேசத்தையும் அதில் வாழும் பாரத மக்களையும் அடிமையாக்கி ஆட்சி புரியும் அந்த பிரிட்டிஷ்காரர்கள் தான் இந்த பெரிய சிலந்தி .‌ அது தனது எட்டு கால்களால் எட்டுத் திசைகளிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தி தங்களிடம் அடிமைப்பட்டவர்களை ஈவு இரக்கமின்றி கொடுமைப்படுத்துகின்றது. இதற்கு உதாரணமே நான் கண்ட இந்த காட்சி என்றாராம். இவ்வளவு இளம் வயதில் துணிவுடன் பேசும் செண்பகராமனைக் கண்டு வியந்த ஸ்ட்ரிட்லேண்ட் தன்னுடன் ஜெர்மனிக்கு அழைத்துச் சென்று உயர்கல்வி புகட்டி அந்நிய மண்ணில் இருந்து பாரத அன்னையின் அடிமைத் தளையை விலக்க அவரை தயார்படுத்தினார்.‌‌
ஆம் அவர் தனவந்தர். ஜெர்மானிய உளவாளி.

செண்பகராமனை இயந்திரவியலில் பட்டமும் மற்றும் பொருளாதாரத் துறையில் மேற்படிப்புகளும் படிக்கச் செய்து பன்மொழி வித்தகன் ஆக்கினார் வளர்ப்புத்தந்தை வால்டர் ஸ்ட்ரிக்லாண்ட். ‌ ஜெர்மானிய அரசர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக்கி அவர்களுக்கு ஆலோசனை கூறும் உயரிய குழுவிலும் இடம்பெறும் தகுதியைப் பெற்று இருந்தார் நம் செண்பகராமன்.

இப்படி செண்பகராமன் கடந்து வந்த பாதை பலவித ஏற்ற இறக்கங்களைக் கண்டபோதிலும் பாரத நாட்டைச் சேர்ந்த பெண்மணி லட்சுமிபாயைத் திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகளே வாழ்ந்தார். லக்ஷ்மி பாய், மேடம் காமா அம்மையாரின் வளர்ப்பு மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேடம் காமா மூலம் இந்திய புரட்சியாளர் வீரசவாக்கரின் வரலாறுகளையும் அவர் அந்தமான் சிறையில் சித்திரைவதைப்படுவதைக் கேட்டு செண்பகராமனின் மனம் கொதித்து எழுந்தது. அதற்குத் தக்க பரிகாரம் தேடி சவார்க்கரை அந்தமான் சிறையில் இருந்து விடுதலை செய்வதோடு பாரத தேசமும் விடுதலை அடைய வேண்டும் என ஆழ்ந்து சிந்தித்து அதன் மூலம் மேற்கொண்ட பயணத்தின் துவக்கமே எம்டனில் மாறுவேடத்தில் செண்பகராமன் பயணித்தது. அவர் முன்பே ஜெர்மானிய கடற்படையில் இடம் பெற்றிருந்தார். இதை செண்பகராமன் பற்றி தொடர் எழுதிய பத்திரிக்கையாளர் ரகமிஅவர்கள் பதிவு செய்திருக்கிறார்.

எம்டன் வருகையை அறிந்த சுத்தானந்த பாரதி‌ மற்றும் மாடசாமியும் அந்த இருட்டில் ஒரு சிறு தோணி மூலம் கடலில் சென்றனர். கடலில் இரண்டு மைல் தூரத்தில் நிற்கும் எம்டனை அடைந்து நூலேணி உதவியால் கப்பலின் மேல் தளத்தை அடைந்தனர். அங்கு இவர்கள் வருகைக்காக காத்திருந்த ஓர் உருவம் இவர்களை கண்டதுமே கட்டித்தழுவி வரவேற்றது. அந்த உருவம் அவர்களிடம் “எனது அன்புச் சகோதரர்களே நான் தான் உங்கள் சகோதரன் செண்பகராமன் பிள்ளை என பெயரையும் கூறியது. ‌ இந்திய மண்ணிலே பிறந்த ஓர் இந்திய வீரன் ஆங்கிலேயரின் விரோதி நாடான ஜெர்மனிக்குச் சென்று அங்கு படித்து பட்டம் பெற்று ஜெர்மனியின் போர்க்கப்பலான எம்டனில் உதவி தளபதியாக வந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை பயமுறுத்தும் வகையில் சென்னையில் குண்டுகளை வீசிய விபரங்களை இருவரும் கேட்டறிந்தனர். பின்னர் வ.வே.சு ஐயர் தந்த ஓர் கடிதத்தையும் செண்பகராமனிடம் தந்தனர். பின்னர் பிரியா விடை பெற்றனர். ஒவ்வொரு இடத்திலும் மாறுவேடம் பூண்டு பயணித்து வந்த செண்பகராமன் கொச்சியில் மீனவனாகவும், பின் ஒரு ரத்தின வியாபாரியைப் போல் தலைப்பாகை பேண்ட் கோட்டுடன் கள்ளிக் கோட்டைக்கும் சென்றார். கொச்சியில் உள்ள யூதர்களின் அரண்மனையில் ஜெர்மனியர்கள் மற்றும் இந்தியர்கள் 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வருகை தந்த பதிவுகளும் “ரூபி ஆப் கொச்சின் “என்ற புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஜெர்மனியில் உயர்ந்த பிரபுக்களின் வாழ்க்கை முறையில் வாழ்வதற்கான சகல உதவிகளும் வளர்ப்புத் தந்தை ஸ்ட்ரிட் லேண்ட் மூலம் நம் செண்பகராமனுக்கு கிடைத்ததில் வியப்பில்லை. இந்தியாவில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற பல தலைவர்கள் மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, குழந்தை இந்திரா பிரியதர்ஷினி, சர்தார் பட்டேலின் மூத்த சகோதரர் வித்தல் பாய் பட்டேல் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அனைவரையும்‌ வரவேற்று அவர்களுக்கான உதவிகளைக் கேட்டறிந்து செய்தவர் நம் செண்பகராமன்.

பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் திருமதி லட்சுமிபாய் மூலம் கேட்டறிந்து அவருக்கான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தார். ஆம் 1934 மே 26 அன்று உயிர்த் துறந்த டாக்டர் செண்பகராமன் பிள்ளையின் உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்தியை அவருடைய மனைவி லட்சுமி பாய் பெற்றுக்கொண்டு 1936 இல் இந்தியாவுக்கு திரும்பி வந்து பம்பாயில் வசிக்க தொடங்கினார். பின்னர் திருமதி இந்திரா காந்தியிடம் தம் கணவர் செண்பகராமனின் இறுதி ஆசையை வெளியிட்டார் அதன்படி அப்போதைய பிரதமர், திருமதி இந்திரா காந்தி 1966 ஆம் ஆண்டு INS டெல்லி போர்க்கப்பல் மூலம் அமரர் செண்பகராமன் அவர்களின் அஸ்தியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவச் செய்து, கரமனை ஆற்றிலும் கரைக்கச் செய்தார். இவற்றை தகுந்த அரசு மரியாதைகளோடு செய்வித்தார். கணவரோடு இரண்டு ஆண்டுகளே வாழ்ந்த மாதர் குல மாணிக்கமான லக்ஷ்மி பாய் 1972 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பம்பாயில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் யாரும் அற்ற நிலையில் உயிர் நீத்தார்.‌ அப்போது மருத்துவமனையில் அவரை அடையாளம் கூறிய மூத்த பத்திரிகையாளர் அவர் கைகளில் இருந்த சாவிக்கொத்துக்களையும் அதன் பின்னணி பற்றியும் உருக்கமான செய்தி வெளியிட்டார். ஆம் அமரர் செண்பகராமன் குறித்த ஆவணங்கள் பதினைந்துக்கும் மேற்பட்ட பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு, திருமதி லக்ஷ்மி பாய் வசம் சாவிக்கொத்து இருந்தது. பின்னர் அப்பொருட்கள் மத்திய அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டது. அமரர் செண்பகராமனின் படமும் கடிதமும் புரட்சியாளர்கள் பகுதியில் தீன் மூர்த்தி பவனில் காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தது. காலம் மிகவும் கடந்து விட்டது. அப் பெட்டிகளில் ஹிட்லரின் மன்னிப்பு கடிதமும் இருக்கலாம்! பல வரலாற்றுச் செய்திகள் வெளி வரலாம்.

ஹேமமாலினி கோபாலன்


Share it if you like it