ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர்!

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர்!

Share it if you like it

ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 2 பேரை பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டர் செய்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அஸ்தஸ்து 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, ராணுவம், பாதுகாப்புப் படையினர், காஷ்மீர் மாநில போலீஸார் இணைந்து பயங்கரவாதிகளை களையெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏராளமான பயங்கரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதன் காரணமாக, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் குறையத் தொடங்கின. இதைத் தொடர்ந்து, உயிருக்கு பயந்து 1990-களில் ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறிய காஷ்மீரி பண்டிட்கள் மீண்டும், தங்களது சொந்த ஊரான காஷ்மீருக்கே சென்று குடியேறினர்.

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கி வருகிறது. குறிப்பாக, காஷ்மீரி பண்டிட்களை குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இதில், சில காஷ்மீரி பண்டிட்களும், மாநில போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதேசமயம், 20-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எனினும், பயங்கரவாத செயல்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. தவிர, பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த மாதத்தில் மட்டும் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏராளமானோர் விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில்தான், ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் போஷ்க்ரீரி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்தனர். இதையறிந்த பயங்கரவாதிகள், பதுங்கி இருந்தபடி, பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உஷாரான பாதுகாப்பு படையினரும், பதுங்கி இருந்து பதிலடி தாக்குதல் நடத்தினார்கள். சுமார் அரை மணிநேரம் இரு தரப்பினருக்கும் இடையே நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும், அப்பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய, பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Share it if you like it