ஜான்சிராணி லட்சுமி பாய்
இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் இடத்தில், 1828 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி, மௌரிய பந்தர், பகீரகி பாய் என்ற தம்பதிக்கு மகளாய் பிறந்தார், லட்சுமி பாய். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் “மணிகர்ணிகா”. இவரை குடும்பத்தினர் செல்லமாக “மனு” என்று அழைத்து வந்தனர்.
தனது 4 வயதிலேயே, ஜான்சிராணி தாயை இழந்து விட்டார். எனவே, தந்தை மௌரிய பந்தர் அரவணைப்பிலேயே வளர்க்கப் பட்டார். பிறவியிலேயே, ஜான்சிராணி போர்க் குணம் நிறைந்து காணப் பட்டார்.
சிறு வயதிலிருந்தே போர் புரியும் ஆசையோடு வாள் வீச்சு, துப்பாக்கி சுடுதல், குதிரை ஏற்றம் போன்ற கலைகளை எல்லாம் எளிதாகவும், முறையாகவும் கற்றுக் கொண்டார். அந்தக் காலத்திலேயே, ஒரு ஆணுக்கு நிகரான, வீரம் கொண்ட பெண்ணாக வளர்ந்து வந்தார்.
1840 ஆம் ஆண்டு, மணிகர்ணிகாவை, அவரது பதினான்காம் வயதில், அப்போது ஜான்சியை ஆண்டு கொண்டிருந்த மன்னர் ராஜா கங்காதர ராவ் நிவால்கர் என்பவருக்கு, அவரது தந்தை மணமுடித்து கொடுத்தார். அவரது திருமணம் ஜான்சியில் இருந்த பழைய விநாயகர் கோவிலில் நடைபெற்றது.
மணிகர்ணிகா, திருமணத்திற்கு பிறகு “ராணி லக்ஷ்மி பாய்” என்று அழைக்கப் பட்டார். பின், ஜான்சியின் “ராணி” ஆக பதவி ஏற்றுக் கொண்டார். ஜான்சியின் மன்னரை மணந்து ராணியானதால் “மணிகர்ணிகா” அன்று முதல், “ஜான்சி ராணி” என்று அழைக்கப் பட்டார்.
1851 ஆம் ஆண்டு, ஜான்சிராணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு “தாமோதர் ராவ்” எனப் பெயரிட்டார். ஆனால், குழந்தை நான்கு மாதத்தில் இறந்து போனது. தாமோதர் ராவ் இறப்பின் பிறகு, மன்னரின் உடல் நிலை மோசமானது.
எனவே, “ஆனந்த ராவ்” என்னும் குழந்தையை தத்தெடுத்து, அந்தக் குழந்தைக்கு “தாமோதர் ராவ்” எனப் பெயரிட்டார், ஜான்சிராணி. இருப்பினும் மகனின் இழப்பால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து மீள முடியாததாலும், உடல் நிலை மேலும் மோசமானதாலும் கங்காதர ராவ் நிவால்கர், நவம்பர் 21,1853 ஆம் ஆண்டு, காலமானார்.
தத்தெடுத்த குழந்தை இந்து மரபின் படி, லட்சுமிபாயின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், அந்தக் குழந்தையை, சட்ட வாரிசாக ஏற்றுக் கொள்ள, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மறுத்து விட்டனர். மறுப்பு கோட்பாட்டின் படி, ஜான்சியின் அரசை கைப்பற்ற ஆங்கிலேய அதிகாரி முடிவு செய்தார்.
லட்சுமி பாய், ஆங்கிலேய வழக்கறிஞர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். அதன் பிறகு, லண்டனில் அவரது வழக்கை, தாக்கல் செய்தார். இருப்பினும் அவரது மனு, நிராகரிக்கப் பட்டது.
ஆங்கிலேய அரசு, லட்சுமிபாயின் அரசு நகைகளை பறிமுதல் செய்தது மட்டுமில்லாமல், ஜான்சி கோட்டையை விட்டு வெளியேறுமாறு, ஆணை பிறப்பித்தது. ஜான்சி ராணி கோட்டையை விட்டு வெளியேறி, ஜான்சியிலுள்ள “ராணி மஹாலுக்கு” சென்றார்.
ஜான்சி கோட்டையை விட்டு வெளியேறினாலும், ஜான்சி அரசை பாதுகாக்க வேண்டும் என்பதில், ராணி உறுதியாக இருந்தார். மேலும், ராணியை கோட்டையை விட்டு வெளியேற செய்ததால், அது மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது.
ஜான்சி ராணி, தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். அது மட்டுமின்றி, ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய படையில், ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை. அதில், பெண்களும் இடம் பெற்று இருந்தனர்.
அச்சமயம் கிளர்ச்சி ஆரம்பித்தது. அதில், தளபதியுடன் இணைந்து ராணி லட்சுமிபாய் போரிட்டார். 1857 ஆம் ஆண்டு, செப்டம்பரில் இருந்து அக்டோபர் வரை போர் நடைபெற்றது. ஜான்சிக்கும், பிரிட்டனுக்கும் ஒரு வாரத்திற்கும் மேல் போர் நீடித்தது.
இறுதியாக, ஜான்சியை ஆங்கிலேய அரசு கைப்பற்றியது. அந்த போரில், ராணி லக்ஷ்மிபாய் ஆண் வேடம் பூண்டு இருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. அதன் வாயிலாக, தன் வளர்ப்பு மகளை மடியில் ஏந்திய படியே தப்பித்தார்.
அங்கிருந்து தப்பித்த லக்ஷ்மி பாய், கல்பியில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர் 1857-ம் ஆண்டு நடைபெற்ற கிளர்ச்சியில் பங்கு பெற்ற, “தத்தியா டோப்” என்னும் மாவீரரை சந்தித்தார். ஆங்கிலேய அரசு குவாலியரை கைப்பற்ற முகாமிட்டிருந்தது.
இதை அறிந்த லக்ஷ்மி பாய், ஆங்கிலேயப் படையை எதிர்த்து “கோட்டாகி சேராய்” என்னும் இடத்தில் இருந்து போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க் கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன்1858 ஆம் ஆண்டு, ஜான்சிராணி இறந்து விட்டார். அவர் மரணமடைந்த மூன்றாவது நாளில் குவாலியரை ஆங்கில அரசு கைப்பற்றியது.