தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக பிரபல அரசியல் விமர்சகர் கே.ஆர். ராதா கிருஷ்ணன் திடுக்கிடும் தகவலை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அவரின் பதிவு இதோ :
நிலத்தடி நீரை இழந்த 360 தமிழக கிராமங்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் தமிழகத்தில், 360 வருவாய் கிராமங்களில், நிலத்தடி நீர் முழுமையாக உறிஞ்சப்பட்டு, நீர் மட்டம் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
மக்கள் தொகை பெருக்கம், தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப, தண்ணீருக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. ஆறு, குளம், அணை போன்ற மேற்பரப்பிலிருந்து கிடைக்கும் தண்ணீர் போதுமானதாக இல்லாதநிலையில், ஆழ்துளை கிணறுகள் மூலம், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது.
விவசாயம், தொழிற்சாலை பயன்பாடு, குடிநீர் என பல்வேறு தேவைகளுக்கு, எவ்வித கட்டுப்பாடுமின்றி நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக சரிந்துவருகிறது. தமிழக நீர்வள ஆதாரத்துறை, நிலத்தடி நீர் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. நடப்பாண்டு இத்துறையினர் வெளியிட்டுள்ள நிலத்தடி நீர் ஆய்வு விவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
அதன் விவரம் வருமாறு: தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில், 1,166 வருவாய் கிராமங்களில் நிலத்தடி நீர் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில், 463 வருவாய் கிராமங்கள் தவிர, அனைத்து இடங்களிலும் உறிஞ்சும் அளவு அதிகரித்து, நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.
மொத்தம், 360 வருவாய் கிராமங்களில் மிக மோசமான நிலையில் (100 சதவீதத்துக்கு மேல்), 78 வருவாய் கிராமங்களில் அபாயகரமான நிலையிலும் (90 – 100 சதவீதம்), 231 வருவாய் கிராமங்களில் மோசமான நிலையிலும் (70 – 90 சதவீதம்) நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டுள்ளது.
சென்னையில் ஆய்வு செய்யப்பட்ட, 30 வருவாய் கிராமங்களில், 26, கோவையில், 38 வருவாய் கிராமங்களில், 23, திருப்பூரில், 33 வருவாய் கிராமங்களில், 10, ஈரோட்டில், 34ல், 11 வருவாய் கிராமங்களிலும் முழுமையாக உறிஞ்சப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது.
மழை நீர் சேகரிப்பு, தண்ணீர் சிக்கன நடவடிக்கை, அபரிமிதமாக உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.