கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு நாள் பெய்த மழைக்கே, 90 லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சாலை விரிசில் விட்டு விட்டது. இதனால், 90 லட்சம் ரூபாய் வீணாகி விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடக்கும் வளர்ச்சிப் பணிகள் அனைத்துமே மிகவும் மோசமாக இருக்கிறது. கட்டிய மூன்றே நாட்களில் பள்ளியின் காம்பவுன்ட் சுவர் இடிந்து விழுந்தது. சாலையின் நடுவில் இருக்கும் மின்கம்பங்களை அகற்றாமலேயே அப்படியே சாலை போட்டனர். தெருக்களின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை அப்புறப்படுத்தாமலேயே, அவற்றுடன் சேர்த்து சிமென்ட் சாலை அமைத்தனர். அதேபோல, குடிநீர் குழாயுடன் சேர்த்து சாலை அமைத்தனர். இதைவிட வேடிக்கை என்னவென்றால், பள்ளியின் நுழைவு வாயிலை அடைத்து கழிவுநீர் கால்வாய் கட்டியதுதான். அந்த வரிசையில், தற்போது சுமார் 1 கோடி ரூபாயில் அமைத்த சாலை, ஒரு நாள் மழைக்கே பல்லிளித்திருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது குலசேகரம். இப்பேரூராட்சியின் தலைவராக இருப்பவர் ஜெயந்தி ஜேம்ஸ். இப்பேரூராட்சி பகுதியில் சமீபத்தில்தான் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சாலை போடப்பட்டது. இந்த சாலையை, கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். இந்த சூழலில், கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இந்த மழையில்தான் 90 லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்ட தார்ச்சாலை ஆங்காங்கே விரிசல் விட்டு காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றனர். தி.மு.க. ஆட்சியில் எந்த பணிகளும் உருப்படியாக நடப்பதில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.