கர்நாடகாவில் பங்களாதேஷிகள்… உ.பி.யில் சீனர்கள்..!

கர்நாடகாவில் பங்களாதேஷிகள்… உ.பி.யில் சீனர்கள்..!

Share it if you like it

கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த பங்களாதேஷிகளும், உத்தரப் பிரதேசத்தில் சீனர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் சட்டவிரோதமாக பங்களாதேஷிகள் தங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பஸ்வனபுரா கிராமத்திலுள்ள லிங்க் ஆஃப் கார்மென்ட்ஸ் என்கிற ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்த 7 பங்களாதேஷிகளை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து போலி இந்திய அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் அஸ்ஸாம் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமநகரா எஸ்.பி. சந்தோஷ் பாபு கூறுகையில், “ராமநகரா மாவட்டம் பஸ்வனாபுரா கிராமத்தில் லிங்க் ஆஃப் கார்மென்ட்ஸ் என்கிற ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சோஹைல் ராணா, சுல்பிகர், உஜ்ஜால், முனாசில், முசா ஷேக், ரஹீம் மற்றும் ஆரிப் ஆகிய 7 பேரை ராமநகரா போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இவர்களிடம் ஒடிஸா, மேற்குவங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களின் அடையாள அட்டைகள் இருந்தன. விசாரணையில், மேற்கண்ட 7 பேரும் சட்டவிரோதமாக மே மாதம் அஸ்ஸாமில் நுழைந்திருக்கிறார்கள். அங்கு புரோக்கர் மூலம் ஒரு முகவரியைப் பயன்படுத்தி ஆதார் அட்டை பெற்றிருக்கிறார்கள். பின்னர், அஸ்ஸாமில் இருந்து கர்நாடகாவின் தொட்டபல்பூருக்குச் சென்று ஜூன் 1-ம் தேதி ராமநகராவை அடைந்திருக்கிறார்கள்.

இதன் பிறகு, ராமநகராவிலுள்ள லிங்க் ஆஃப் கார்மென்ட்ஸ் என்கிற ஆடை தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்ததோடு, அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்தும் தங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆடை நிறுவனம் எப்படி வேலை வழங்கியது என்பது குறித்து தொழிற்சாலை உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்படும். மேலும், இவர்களுக்கு இந்திய அடையாள அட்டை வாங்க உதவிய புரோக்கரையும் தேடி வருகிறோம். இவர்கள் வேலைக்காக மட்டும் கர்நாடகாவுக்கு வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் சதித் திட்டம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று சந்தோஷ் பாபு தெரிவித்திருக்கிறார்.

இதேபோல, உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் பப் மற்றும் பார் நடத்தி வந்த ஜான்சன் என்கிற சீன நபரையும், அவரது நண்பர்கள் ரியான், ஜெங் ஹாயோ மற்றும் ஜெங் டே ஆகியோரையும் அம்மாநில சிறப்பு அதிரடிப்படை ஜூலை 13-ம் தேதி கைது செய்திருக்கிறது. இவர்களது பாஸ்போர்ட் 2020-ம் ஆண்டுடன் காலாவதியாகி விட்ட நிலையில், சட்டவிரோதமாக தங்கி இருந்ததால் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

blank

அதேபோல, நொய்டாவின் கர்பரா கிராமத்தில் ஒரு வீட்டை சோதனையிட்டத்தில் அது சீனர்கள் மட்டுமே உள்ள கிளப் என்பது தெரியவந்தது. இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் 20 சீன பிரஜைகள், இந்த கிளப்பை பாதுகாப்பான புகலிடமாகவும், கூடும் இடமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்த கிளப்புக்கு ஹு பெய், ஜான்சன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ரவி நட்வர்லால் ஆகிய மூவரும் பங்குதாரர்கள். மேலும், மற்றொரு சம்பவத்தில் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்தாக ஒரு பெண் உட்பட 14 சீனர்களை நொய்டா போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் நொய்டாவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்கள். இவர்களின் விசாக்களும் 2020-ம் ஆண்டுடன் காலாவதியாகி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it