கர்நாடக முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவிற்கு முதல்வர் பதவி வழங்கக் கோரி, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால், முதல்வர் யார் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது. புதிய முதல்வராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், முதல் முறையாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
இதையடுத்து, சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிறகு, கர்நாடகாவின் புதிய முதல்வர் யார் என்கிற அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், பரபரப்பை கூட்டும் வகையில், கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவும் முதல்வர் ரேஸில் குதித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, பரமேஸ்வராவிற்கு முதல்வர் பதவி வழங்கக் கோரி, அவரது ஆதரவாளர்கள் தும்குருவில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆக, கர்நாடக நிலைமை கந்தல்தான் போல…