கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையத்தில் வேலை நேரத்தில் வரி வசூல் செய்வதை விட்டுவிட்டு, புடவையை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்களால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாகவே, தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ளிட்ட அலுவலகங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வரி வசூல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட வரிகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இவற்றை கட்டச் சொல்லி மாநகராட்சி ஊழியர்கள் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தும், வீட்டிலேயே வசூல் செய்தும் வருகின்றனர். தவிர, முன்கூட்டியே வரி கட்டுபவர்களுக்கு 5% டிஸ்கவுன்ட்டும் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் அலுவலகம் வந்த ஊழியர்கள், தங்களது பணியினை மேற்கொண்டிருந்தனர். ஆனால், வரி வசூல் செய்யும் கவுன்ட்டர்களில் மட்டும் வேறொரு சம்பவம் நடந்து கொண்டிருந்தது. அதாவது, பணியில் இருந்த 3 பெண் ஊழியர்களும், 1 ஆண் ஊழியரும் வரி வசூல் செய்வதை நிறுத்தி விட்டு, ஒரு புடவை வியாபாரி கொண்டு வந்த புதிய ரக புடவைகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். இதனால், வரி செலுத்த வந்தவர்கள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தி.மு.க. ஆட்சியில் அரசு அலுவலகம் முதல் போலீஸ் நிலையங்கள் வரை எதுவுமே உருப்படியாக இயங்கியதாகத் தெரியவில்லை என்கிறார்கள் பொதுமக்கள்.