நடிக்க வாய்ப்புத் தருவதாகக் கூறி, இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக மலையாள சினிமா தயாரிப்பாளர் மார்ட்டின் செபாஸ்டியனை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திரையுலகைப் பொறுத்தவரை, நடக்க வாய்ப்புத் தேடி வரும் இளம்பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகளவில் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன. இதை மெய்ப்பிக்கும் வகையில் “மீ டூ” இயக்கம் மூலம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை பல்வேறு திரையுல பெண்கள் அம்பலப்படுத்தினர். குறிப்பாக, பிரபல நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
இந்த நிலையில்தான், நடிக்க வாய்ப்புத் தருவதாகக் கூறி, பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர் ஒருவர், தன்னை 13 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். மலையாள திரைப்பட உலகில் பல படங்களை தயாரித்து பிரபல பட அதிபராக இருப்பவர் மார்ட்டின் செபாஸ்டியன். இவர் மீதுதான் திருச்சூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். அப்புகாரில், “சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தருவதாக ஆசைகாட்டி, மார்ட்டின் செபாஸ்டியன் எனக்கு 13 ஆண்டுகள் பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து மும்பை, பெங்களூரு நகரங்களுக்கு அழைத்துச்சென்று என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்” என்று கூறியிருக்கிறார்.
இப்புகார் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். எனினும், இக் குற்றச்சாட்டுகளை மறுத்த மார்ட்டின் செபாஸ்டியன், போலீஸார் தன்னை கைது செய்யாமல் இருக்க கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். பிறகு, எர்ணாகுளம் போலீஸார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனையுடன் கோர்ட் முன்ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, மார்ட்டின் செபாஸ்டியன் போலீஸில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததால், மார்ட்டின் செபாஸ்டியனை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருககிறது.