கேரளாவில் ஆதிவாசி வாலிபர் மது அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது பீகாரைச் சேர்ந்த பட்டியலின தொழிலாளியையும் அடித்துக் கொலை செய்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, முகமது அப்சல், பாசில், ஷராபுதீன், மெஹபூப், அப்துஸ் சமது, நாசர், ஹபீப், அயூப், ஜைனுல் ஆபித் ஆகிய 9 பேரை கேரளா போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
பீகார் மாநிலம் கிழக்கு சம்பராண் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மஞ்சி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், புலம் பெயர்ந்து வந்து கேரள மாநிலம் மலப்புரத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்த சூழலில், கடந்த 12-ம் தேதி இரவு கீழச்சேரி பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது, ராஜேஷ் மாஞ்சி திருடியதாகக் கூறி, அப்பகுதி இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் பிடித்து கட்டி வைத்திருக்கிறார்கள். பின்னர், பிளாஸ்டிக் பைப், கட்டைகளால் ராஜேஷை சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். இதில், ராஜேஷ் மஞ்சியின் மார்பு, விலா எலும்புகள் உடைந்தும், இடுப்பில் காயங்களும் ஏற்பட்டது.
இதனால், ராஜேஷ் மாஞ்சி மயக்கமடைந்த நிலையில், அவரை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிட்டது அக்கும்பல். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விரைந்து வந்த போலீஸார், ராஜேஷ் மாஞ்சியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ராஜேஷ் மாஞ்சியை தாக்கியவர்கள் குறித்து அப்பகுதியில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, கொலை தொடர்பான சி.சி.டி.வி. காட்சி போலீஸாரிடம் சிக்கியது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ராஜேஷ் மாஞ்சி கொலை தொடர்பாக, கீழச்சேரியைச் சேர்ந்த முகமது அப்சல், பாசில், ஷராபுதீன், மெஹபூப், அப்துஸ் சமது, நாசர், ஹபீப், அயூப், ஜைனுல் ஆபித் ஆகிய 9 பேரை இன்று கைது செய்தனர். விசாரணையில், திருடன் என நினைத்து ராஜேஷ் மாஞ்சியை தாக்கியதாகக் கூறியிருக்கிறார்கள். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோல, கடந்த 2018-ம் ஆண்டு முக்காலி கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசி வாலிபர் மது என்பவரை, அரிசி திருடியதாகக் கூறி, முஸ்லீம் இளைஞர்கள் அடித்துக் கொலை செய்து, வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் 10 முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.