தமிழகம், கேரளாவில் ஆயுத பயிற்சி: பி.எஃப்.ஐ. அமைப்பினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

தமிழகம், கேரளாவில் ஆயுத பயிற்சி: பி.எஃப்.ஐ. அமைப்பினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

Share it if you like it

தமிழகம், கேரளாவில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு எதிராக 2 குற்றப்பத்திரிகைகளை நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்திருக்கிறது.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு (என்.ஐ.ஏ.) குற்றம்சாட்டியது. இதையடுத்து. அந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்தாண்டு நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உட்பட சில அமைப்புகள் மத்திய அரசால் 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது. அதேசமயம், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் மீது பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. அமைப்பினர் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்புடைய 4 வழக்குகள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. தாக்கல் செய்திருக்கிறது. அதன்படி, கடந்த 13-ம் தேதி ஜெய்ப்பூர் மாநிலத்திலும், 16-ம் தேதி ஹைதராபாத் மாநிலத்திலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. தற்போது, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த 68 பேர் மீது நீதிமன்றத்தில் நேற்று என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. இந்த குற்றப்பத்திரிகையில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, கேரளா மற்றும் தமிழகத்தில் தீவிரமாக மத பிரசாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், இரு பிரிவினருடைய மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததாகவும், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய விதிகளை அமல்படுத்த தீவிரமாக செயல்பட்டு வந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தவிர, இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து, ஆயுதங்கள் கையாள்வது தொடர்பாகவும், நிதி வசூலில் ஈடுபடவும் கூட்டங்கள் நடத்தி பயிற்சி அளித்திருப்பதும், கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் ஸ்ரீனிவாசன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பி.எஃப்.ஐ. அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்திருக்கிறது என்றும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பி.எஃப்.ஐ. நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதியதவி வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்குச் சொந்தமான 17 நிலங்கள் மற்றும் 18 வங்கிக் கணக்குகளை முடக்கி இருப்பதாகவும் குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ. தெரிவித்திருக்கிறது.

கேரளாவில் பி.எஃப்.ஐ. மாநில பொதுச்செயலாளர் அப்துல் சதார், மாநில நிர்வாக உறுப்பினர் யாஹியா கோயா தங்கல், எர்ணாகுளம் மண்டலச் செயலாளர் சியாஸ் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்களின் பெயர்களையும், தமிழகத்தில் மாநில துணைத் தலைவர் காலித் முகமது உட்பட 10 பேர் பெயர்களையும் குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ. குறிப்பிட்டிருப்பதோடு, 10 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.


Share it if you like it