திருச்சி கவுன்சிலரை அமைச்சர் கே.என். நேரு தலையில் ஓங்கி அடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருப்பவர் கே.என். நேரு. இவர், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரிய மிளகுபாறையில் தண்ணீர் தொட்டியை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், கட்சி தொண்டர்கள் பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு இலவசமாக சில்வர் குடங்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, குடத்துடன் காத்திருந்த பெண்களுக்கு திருச்சி கவுன்சிலர் புஷ்பராஜ் குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் பிடித்து கொடுத்தார். அதனை, வாங்கி அமைச்சர் கே.என். நேரு பெண்களிடம் வழங்கினார். பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் தண்ணீரை வேகமாக பிடித்து கொடுக்க வேண்டிய நிர்பந்தம் புஷ்பராஜ்க்கு ஏற்பட்டது.
இதன்காரணமாக, அமைச்சர் கே.என். நேருவிற்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. அந்தவகையில், கடும் உஷ்ணமான அமைச்சர் கே.என். நேரு கவுன்சிலர் தலையில் ஓங்கி அடித்து வேகமாக தண்ணீரை பிடித்து கொடு என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த காணொளி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பயனாளிகளுக்கு இலவச வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி பாலவநத்தம் ஊராட்சியில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி மற்றும் தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள், அரசு உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டர்.
இந்த நிகழ்ச்சி முடிந்த பின்பு ஏராளமான பொதுமக்கள் அமைச்சரிடம் மனு கொடுத்தனர். அப்போது, பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கலாவதி (45) என்பவரும் அமைச்சரிடம் மனு கொடுத்து இருக்கிறார். அப்போது, தனது குடும்ப சூழ்நிலையை அமைச்சரிடம் உருக்கமுடன் எடுத்து கூறி இருக்கிறார். மேலும், தனது பெற்றோருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும்படி மனு கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை என அமைச்சரிடம் புகார் தெரிவித்து இருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், கலாவதி கொடுத்த மனுவை வைத்தே அவரது தலையில் ஓங்கி அடித்த சம்பவம் அந்நாட்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனை தொடர்ந்து, அமைச்சரின் அல்லகைகள் கலாவதிக்கு அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதனை தொடர்ந்து, தம்மை அமைச்சர் செல்லமாக தட்டியதாகவும், அவர் எனது நெருங்கிய உறவினர் என்று ஊடகங்களுக்கு காலாவதியான பதிலை கொடுத்து இருந்தார் கலாவதி என்பது குறிப்பிடத்தக்கது.