காட்டிக் கொடுத்த தேசியகீதம்: கம்பி எண்ணும் வங்கதேச வாலிபர்!

காட்டிக் கொடுத்த தேசியகீதம்: கம்பி எண்ணும் வங்கதேச வாலிபர்!

Share it if you like it

ஷார்ஜாவிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் கோவைக்கு வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த அன்வர் உசேன், குடியேற்றத் துறை அதிகாரிகள் தேசிய கீதம் பாடச் சொன்னதால் திருதிருவென முழிக்கவே, போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரபு நாடான ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த ஏர் அரேபியா விமான பயணிகளிடம், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை குடியேற்றத்துறை அதிகாரிகள் சரி பார்த்தனர். அப்போது, ஒரு பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படவே, அவரது பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அதில், அவர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, குடியேற்றத்துறை அதிகாரிகள் அந்த வாலிபரிடம், ஷார்ஜாவில் இருந்து கொல்கத்தா செல்லாமல், கோவை விமான நிலையம் வந்து ஏன்? குடும்பத்தினர் எங்கு உள்ளனர்? என்று துருவித்துருவி விசாரணை செய்தனர்.

இவை எல்லாவற்றுக்கும் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே, சந்தேகமடைந்த அதிகாரிகள், அந்த பயணியிடம் இந்திய தேசியகீதத்தை பாடும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால், அவருக்கு தேசியகீதத்தில் சில வார்த்தைகள்கூட தெரியவில்லை. இதையடுத்து, அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், போலி ஆவணங்கள் கொடுத்து இந்திய பாஸ்போர்ட் பெற்றதும் தெரியவந்தது. மேலும், தொடர் விசாரணையில் அவரது பெயர் அன்வர் உசேன் என்பதும், 2018-ம் ஆண்டு திருப்பூரிலுள்ள ஒரு பனியன் கம்பெனியில் டெய்லராக வேலைபார்த்ததும் தெரியவந்தது.

இதன் பிறகு, அன்வர் உசேன் பெங்களூருவில் போலியாக பிறப்புச் சான்றிதழ் தயாரித்து, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா முகவரியில் ஆதார் எண் பெற்றதும், இந்த ஆவணங்களை பயன்படுத்தி கடந்த 2020-ம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட் பெற்றதும், அந்த பாஸ்போர்ட் மூலம் ஷார்ஜா சென்றதும் தெரியவந்தது. ஆனால், ஷார்ஜாவில் அவருக்கு இந்திய மதிப்பில் 30,000 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், ஏமாற்றமடைந்த அவர், மீண்டும் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்ல முடிவு செய்திருக்கிறார்.

ஆகவே, ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு வந்திருக்கிறார். இங்கு அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, வசமாக சிக்கிக் கொண்டார். இதையடுத்து, குடியேற்றத்துறை அதிகாரிகள், அன்வர் உசேனை கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அன்வர் உசேனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


Share it if you like it