” கௌசல்யா சுப்ரஜா ராம…….” என்று தன் தேனினும் இனிய குரலால் நித்தமும் வேங்கடவனை துயிலெழுப்பும் பாக்கியம் பெற்ற இசைக்குயில் M.S.சுப்புலட்சுமி.
இறைவனை மட்டுமா எழுப்புகிறார்? நம்மையும் தான்.
தமிழகம் உள்ளிட்ட தென்னகத்தில் பெரும்பாலான இல்லங்களில் பொழுது புலர்வதே ‘கௌசல்யா சுப்ரஜா’வுடன் தான் .
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியான இவர் இசைத் துறையில் அடையாத சிகரங்களில்லை.
சிறுவயதிலேயே அன்னையிடம் இசை பயின்றவர் இசையுலக ஜாம்பவான்களின் கச்சேரிகளை சிறுவயதிலேயே கேட்டு ரசிக்கும் பேறு பெற்றார்.
வீதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை மேடைக்கு அழைத்து
” பாடு ” என்று அன்னை பணிக்க எவ்வித தயக்கமோ பயமோ இன்றி பிரவாகமாய் வந்தது மரகத வடிவம் பாடல்! அன்றே இசையுலகம் அறிந்தது இவரொரு பிறவிக்கலைஞரென.
பல்லாண்டு காலம் தன் அமுதக்குரலால் இசையையும் இசையால் பக்தியையும் வளர்த்த M.S. நடமாடும் தெய்வம் என போற்றப்பட்ட காஞ்சி பரமாச்சாரியரின் தீவிர பக்தை.
அவரின் வழிகாட்டுதலுடன் M.S பாடி வெளிவந்த ‘விஷ்ணு சஹஸ்ரநாமம் ‘ இசைத்தட்டு தான் ஒவ்வொரு சனாதனவாதியின் இல்லத்திலும் ஒலிக்கிறது.
இந்த இசைத்தட்டை வைத்துத் தான் இன்று வரை ஸ்லோகத்தின் உச்சரிப்பு , குறில் நெடில் ஓசை, சரியான நிறுத்தங்கள் போன்றவற்றைப் பயில்கின்றனர்.
காஞ்சி மாமுனி இயற்றிய
” மைத்ரீம் பஜத ” பாடலை 1966ம் ஆண்டில் பாரதத்தின் கலாச்சார தூதராக ஐக்கிய நாடுகள் சபையில் பாடி பெரும் வரவேற்பைப் பெற்றார் எம்.எஸ் .
பாமரர் முதல் பாராளும் தலைவர்கள் வரை இவரது குரலுக்கு ரசிகர்கள். பட்டியலில் தேச பிதா காந்தியும் பண்டித நேருவும் கூட உண்டு.
வேறொருவர் பாடி மீரா பஜன்களைக் கேட்பதை விட எம்.எஸ் உரைநடையாக வாசித்தாலும் கேட்க விருப்பம் என காந்தியும் ,
இந்த இசையரசியின் முன் நானொரு சாதாரண பிரதம மந்திரியென நேருவும் நெகிழ்ந்தனர்.
ஆதி சங்கரரின் ‘பஜ கோவிந்தம்’ இவர் குரலில் கேட்கக் கேட்க இசையும் பக்தியும் ஞானமும் ஒன்றுகலப்பதை உணரலாம்.
இவரது ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா ‘பாடல் உச்சபட்ச பக்தியின் வெளிப்பாடு.
இந்த இசைக்குயில்
‘சேவா சதனம் ‘, ‘சகுந்தலை ‘ ‘மீரா’ , ‘சாவித்ரி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தினார்.
சிறந்த தேசாபிமானியான M.S மிகச்சிறந்த மனிதாபிமானியும் கூட.
இசையால் தான் பெற்ற வருமானத்தையெல்லாம் பொதுச் சேவைக்கே அளித்த எளிமையின் உருவம்.
இவரது இசைச் சேவையையும் பொதுச்சேவையையும் அங்கீகரித்து பத்ம பூஷன் ,பத்ம விபூஷன் , பாரத் ரத்னா விருது வழங்கி கௌரவித்தது பாரத அரசு.
பாரத ரத்னா வழங்கப்பட்ட முதல் இசைக் கலைஞர் M.S தான்.
2005ல் சிறப்பு தபால்தலையும் நமது அரசு வெளியிட்டு பெருமைப்படுத்தியது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய வருதான
ரமோன் மேக்ஸஸே விருது பெற்ற முதல் இந்திய இசைக் கலைஞரும் எம்.எஸ் தான்.
சங்கீத நாடக அகடமி விருது , சங்கீத கலாநிதி விருது ,இசைப்பேரறிஞர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற M.S .சுப்புலட்சுமி யின் கலைச்சேவையைப்போற்றி திருப்பதி ஆலய நுழைவாயிலில் சிலையமைத்து கௌரவித்தது ஆந்திர அரசு.
இன்னும் சொல்ல மறந்த ஏராளமான புகழுக்குச் சொந்தக்காரர் M.S அம்மாவின் பிறந்ததினம் இன்று – செப்.16.
இறவாப் புகழ் பெற்றவரின் இசை இன்றும் என்றும் ” காற்றினிலே வரும் கீதம் “!
திருமதி. பிரியா ராம்குமார்